நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனது பதவியைக் கடந்த ஜூலை மாதம் 3ஆம் தேதி (03.07.2024) ராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளராகக் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் என்பவரை திமுக அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து நெல்லை மாநகராட்சியின் மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று (05.08.2024) நடைபெற்றது. இதற்கிடையே திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கிட்டு மற்றும் திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பவுல்ராஜ் ஆகியோர் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக கிட்டு தேர்வு செய்யப்பட்டார். நெல்லை மேயருக்கான மறைமுகத் தேர்தலில் 30 வாக்குகள் பெற்றுக் கிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார். வெற்றி பெற்ற சான்றிதழைப் பெற்ற பிறகு மேயர் கிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “எனக்கு எதிராக வாக்களித்தவர்களும் என்னுடைய சகோதர சகோதரிகள் தான். இதனை நான் எதிர்ப்பாகப் பார்க்கவில்லை. மாமன்ற உறுப்பினர்களான எங்களுக்குள் நடைபெற்ற தேர்தல் என்பதால் இதனை வெறுப்பாகப் பார்க்க இல்லை.
சென்னை மாநகராட்சி மேயராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்த மு.க. ஸ்டாலின் மக்களுக்கு எவ்வாறு அடிப்படை வசதி மேம்படுத்திக் கொடுத்தார்களோ, சென்னையைச் சிங்கார சென்னையாக மாற்றினார்களோ அதே மாதிரி திருநெல்வேலி மாநகராட்சியைச் சென்னைக்குச் சமமாக மாற்றுவேன். தற்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சரின் முழு ஒத்துழைப்பு உள்ளது. முதலமைச்சர் மூலமாகவும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூலமாகவும் மாநகராட்சிக்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொண்டு திருநெல்வேலி மாநகராட்சியை இந்தியாவிலேயே நம்பர் 1 மாநகராட்சியாக மாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.