'பாஜக மாநில தலைவர் குற்றப்பின்னணி உள்ளவர்களை எந்தச் சூழ்நிலையிலும் சேர்க்கவில்லை. இதை ஒருவேளை தமிழிசை நிரூபித்துவிட்டால் நான் பாஜகவில் இருந்து நாளையே போய் விடுகிறேன்' எனப் பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா பேசுகையில், ''இருக்கும் மாண்பை முன்னாள் மாநில தலைவர் (தமிழிசை) காப்பாற்ற வேண்டும். பொது இடத்திற்கு போகும் போது தவறான விஷயங்களைப் பேச வேண்டாமே. சில விஷயங்களைச் சொல்வதற்கும் இடம் இருக்கிறது. இன்றைக்கு தனிப்பட்ட முறையில் தமிழிசை அக்கா எனக்கு மிகவும் நெருக்கமானவர். தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் தமிழிசை அக்காவுக்கும் பயங்கர போர் நடக்கும். அந்தச் சூழ்நிலையிலும் நான் திமுகவில் இருக்கும் பொழுது கூட என்னுடைய மகன் பிறந்தநாளுக்கு வந்துட்டு போனார்கள். அவர்கள் என் மீது மிகவும் பிரியம் கொண்டவர். ஆனால் கட்சி ரீதியாக பார்க்கும் போது அவர்களிடம் நெருக்கமாக இருந்தாலும், அவரை தலைவராக ஏற்று நான் பாஜகவிற்கு வரவில்லை.
யார் தலைவரோ அவருடன் உடன்பாடு, பிரியம், கட்டுப்பாடு இருக்க வேண்டும். திமுகவினர் சிலர் ஆட்டுக்கு பாஜக தலைவரின் புகைப்படத்தை மாட்டிவிட்டு அதை நடு ரோட்டில் வெட்டுகிறார்கள். அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு தமிழிசை எங்காவது அதற்கு கண்டனம் தெரிவித்தார்களா? அவங்களை பரட்டை எனச் சொன்னது கோபம் வருகிறது. ஆனால் மாநில தலைவரின் புகைப்படத்தை ஆட்டின் கழுத்தில் மாட்டி அதே திமுக காரர்கள் நடுரோட்டில் வெட்டுவதற்கு தமிழிசை கண்டனம் தெரிவிச்சாரா? அதை எல்லாம் பேசாதவர்கள் இதை ஏன் பேச வேண்டும். உங்களுக்கு கருத்து இருந்தால் முன்னாள் மாநில தலைவர் என்ற கட்டுப்பாடுடன் கட்சித் தலைவருக்கு தெரியப்படுத்த வேண்டும். பாஜக மாநில தலைவர் குற்றப்பின்னணி உள்ளவர்களை எந்தச் சூழ்நிலையிலும் சேர்க்கவில்லை. இதை ஒருவேளை தமிழிசை நிரூபித்துவிட்டால் நான் பாஜகவில் இருந்து நாளையே போய் விடுகிறேன். ஒரு குற்றப்பின்னணியில் வருவோரை கட்சியில் சேர்த்தார்கள் என்று கணக்கு காட்ட வேண்டும். அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. அது நடந்தது முன்னாள் மாநில தலைவர்கள் இருந்த சூழ்நிலையில்தான்'' என்றார்.