திண்டுக்கல் மாவட்ட அழகிரி பேரவை சார்பில் திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலைஞருக்கு புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலைஞரின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரியும் அவருடைய ஆதரவாளர்களும் ஐம்பதுக்கு மேற்பட்ட கார்களில் வந்தனர். அவர்களை மாவட்ட பொறுப்பாளர்களான பிரேம்சந்திரன், பிரபாகரன், கண்ணன் ஆகியோர் மாலை சால்வை அணிவித்து வரவேற்றனர். அதன் பின் புகழ் அஞ்சலி விழா மேடையில் பேசிய மு.க.அழகிரியோ... நான் திமுகவில் இருந்து சதியால் வெளியேற்றப்பட்டேன். தொண்டர்களுக்காக பேசியதால் வெளியேற்றப்பட்டேன். சமீப நாட்களாக திமுகவினர் பிள்ளை பிடிப்பவர்களை போல ஆட்களைப் பிடித்து கொண்டு இருக்கிறார்கள்.
எனக்கு ஆதரவாக வரும் திமுக தொண்டர்களை பதவி ஆசை காட்டி அழைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் என்னிடம் இருக்கும் யாரும் பதவிக்காக அலைபவர்கள் அல்ல. சமீபத்தில் இரண்டு பேர் போனார்கள். நெப்போலியன் என சொல்லிக்கொள்ளும் கருப்பசாமி பாண்டியன் மிகப்பெரிய கோழை.
ஒருமுறை சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட கருப்பசாமி பாண்டியன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அப்போது நானும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கே. பி. ராமலிங்கமும் சிறையில் சென்று அவரை சந்தித்தோம். அப்போது ஓவென கதறி அழுதார். குடும்பத்தை விட்டு சிறையில் இருக்கிறேன் எனக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது என கண்ணீர் விட்டு அழுதார். சிறைக்கு பயந்தவன் திமுக காரணமாக இருக்க முடியாது. அப்படிப்பட்ட கருப்பசாமி பாண்டியன் போனதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
நான் இங்கு அரசியல் பேச வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் இங்கு பேசியவர்கள் கலைஞரோடு என்னை ஒப்பிட்டு பேசினார்கள். அதனால் பேசுகிறேன். கலைஞரின் ஆற்றல், திறனுக்கு நான் ஒப்பானவன் இல்லை. என்றாலும் அவரிடமிருந்து சுயமரியாதை மற்றும் உழைப்பைக் கற்றுக் கொண்டேன்.
இன்று திருமங்கலம் பார்முலா என குறிப்பிடுகிறார்கள். இடைத்தேர்தல்களில் உங்கள் உழைப்புடன் நான் இணைந்து செய்த பணி திமுகவுக்கு வெற்றி பெற்றுத்தந்தது. அதை இன்று மறந்துவிட்டார்கள்.
செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. மாற்றத்திற்கான வேளை வந்து கொண்டிருக்கிறது. அதுவரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும். விரைவில் தேர்தல் வரும். அப்போது நமது திறமையை காட்டுவோம். தேர்தல் நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நான் அப்போது தெரிவிப்பேன். அதுவரை அமைதியாக இருங்கள் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ திண்டுக்கல் மணிமாறன், ரெட்டியார் சத்திரம் தம்பிதுரை உள்பட சிலரும் அழகிரி ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.