உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 14 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். உலகளவில் 14.42 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 12.32 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30.06 லட்சமாக இருக்கிறது.
இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.53 கோடியை கடந்துள்ளது. தமிழகத்திலும் கரோனா பதிப்பு அதிகரித்து வருகிறது. இன்றும் மட்டும் கரோனா தொற்றால் 94 பேர் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். மருத்துவர்கள் சார்பில், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிவது கட்டாயம் என தொடர்ந்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முகக்கவசம், தனிமனித இடைவெளி குறித்த கரோனா விழிப்புணர்வுகள் மீம்ஸ் போன்ற பல்வேறு புது வழிகளில் மக்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டாலும் மருத்துவர்களும் சமூக வலைத்தளங்கள் மூலமாக மக்களுக்கு கரோனா விழிப்புணர்வுகளை பல்வேறு புதிய யுத்திகளின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் வாழப்பாடியைச் சேர்ந்த மருத்துவர் குழுவினர் கரோனாவின் கொடூரம் பற்றியும், பாதுகாப்பு முக்கியம் என்பது பற்றியும் உணர்த்தும் விதமாக விழிப்புணர்வுப் பாடலை அவர்களே எழுதி - பாடி -உருவாக்கியுள்ளனர். 'புதிய பறவை' திரைப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் பாடும் தத்துவப்பாடலான 'எங்கே நிம்மதி' என்ற பாடலின் மெட்டில் இது அமைந்திருக்கிறது. பாடலை டாக்டர். சி. மோதிலால் எழுத, டாக்டர்.ராதாகிருஷ்னண் பாடியுள்ளார். டாக்டர்.மகேஸ்வரன் இந்த பாடலை உருவாக்கியுள்ளார்.
கரோனா பாதித்தவர் பாடுவதுபோல் அமைக்கப்பட்டுள்ள அந்த பாடலில் சில வரிகள்...
'அங்கே லாக்டவுன்... இங்கே குவாரன்டைன்... எங்கும் சோஷியல் டிஸ்டன்ஸிங்... எங்கும் சோஷியல் டிஸ்டன்ஸிங்...
எங்கே கர்ஃப்யூ எதுவும் இல்லையோ அங்கே எனக்கொரு இடம் வேண்டும்... அங்கே எனக்கொரு இடம் வேண்டும்...
எனது அருகில் இருக்கும் பேஷண்ட் மூச்சு திணறுகிறான்... எனது அருகில் இன்னொரு பேஷண்ட் மூச்சை நிறுத்திவிட்டான்...'