
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செட்டியபட்டியைச் சேர்ந்தவர் திருப்பதி. விவசாயக் கூலித் தொழிலாளியான இவர், 01/10/2021 அன்று காலை 08.00 மணியளவில் குளித்துவிட்டு ஈரத்துண்டை கொடியில் காய வைக்க கயிற்றில் போட்டபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மின்சாரம் தாக்கி அப்படியே நின்று உள்ளார். அவரை காப்பாற்ற வந்த அவரது இரண்டு மகன்கள் விஜய கணபதி மற்றும் சந்தோஷ் ஆகியோரும் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டனர்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் முருகன் மற்றும் அவரது மனைவி சூர்யா, அவர்களை காப்பாற்ற வந்த போது அவர்களும் மின்சாரம் தாக்கித் தூக்கி வீசப்பட்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது, அந்த கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இது குறித்து தகவலறிந்த தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சரும், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான ஐ.பெரியசாமி நேற்று (02/10/2021) இரவு 08.00 மணியளவில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல செட்டியப்பட்டிக்கு வந்தார்.
அங்கு அவர் கையைப் பிடித்த படி திருப்பதியின் தாயார் கண்ணம்மாள் மகனையும், பேரன்களையும் இழந்து விட்டேன் என உருக்கமாக, கண்ணீருடன் பேசினார். அப்போது அவருக்கு ஆறுதல் கூறிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, " நான் மகன் போல் உங்களை நான் பார்த்துக் கொள்கிறேன். கணவரையும், மகன்களையும் இழந்த வசந்தாவிடம் மகன்கள் படித்து கல்லூரிக்குச் செல்லும் போது, அவர்களை இழந்து விட்டீர்கள். உங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி விட்டது. உங்களுக்கு தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசு சார்பாக நிச்சயம் செய்வேன்" என்று உறுதியளித்தார்.
அத்துடன், உடனடியாக ஊராட்சி மன்றத் தலைவர் ராஜாவை அழைத்து அந்த குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அறிவுறுத்தினார். அதன் பின்பு மின்சாரத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற போய் காயங்களுடன் உயிர் தப்பிய முருன் வீட்டுக்கு சென்ற அமைச்சர் ஐ.பெரியசாமி, அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும், செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியரை தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவி உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும், அந்த குடும்பத்திற்கு நிரந்தர வாழ்வாதாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)