75வது சுதந்திர தினத்தையொட்டி தமிழக முதல்வர் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார். அதில், முதன் முறையாக 'சிறந்த திருங்கை' விருது வழங்கப்பட்டுள்ளது.
மூன்றாம் பாலினத்தவரை இந்தச் சமூகம் பல வகையான பெயர்களை வைத்து அழைத்துக்கொண்டு இருந்த காலகட்டத்தில், முன்னாள் முதல்வர் கலைஞர், அவர்களுக்கு 'திருநங்கை' என்ற பெயரை வழங்கி சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து அவர்களின் வளர்ச்சிக்காக தனி நலவாரியம் அமைத்துக் கொடுத்தார். தற்போது அதே வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் திருங்கைகளுக்குப் பேருந்து கட்டணம் இலவசம், குடும்ப அட்டைதாரருக்கு் கிடைக்கும் உதவித்தொகை என அனைத்திலும் அவர்கள் சமூகத்திற்கும் கிடைக்க வகை செய்தார். அதைத்தாண்டி சாதனையாளர்களுக்கான விருதும் திருநங்கையான கிரேஸ்பானுக்கு வழங்கி சிறப்பித்துள்ளார்.
கிரேஸ் பானுவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பொதுத்தளத்திற்கான போராட்டங்களாக இருந்தாலும் சரி, அது அவருடைய சமூகத்திற்கான போராட்டமாக இருந்தாலும் சரி, ஒரே தளத்தில் நின்று போராடுவது அவரது இயல்பான குணம். தூத்துக்குடியை தனது பூர்விகமாகக் கொண்ட கிரேஸ் பானு, தன் தாய் தந்தையினரால் புறக்கணிக்கப்பட்டு பல போராட்டங்களுக்குப் பிறகு, பொறியியல் பட்டம் பெற்ற முதல் திருநங்கை. இவர், சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த போது சமூகத்தின் வன்மத்தைக் கண்டு ஒதுங்கிவிடாமல் தனது வாழக்கையைப் போராட்ட களத்திற்கு திசை திருப்பிக்கொண்டார்.
அரசு போட்டி தேர்வுகளில் திருநங்கைளும் பங்கேற்க வேண்டும் என நீதிமன்ற ஆணை பெற்று, இந்தியாவின் முதல் போலீஸ் எஸ்.ஐ.யாக தேர்வான திருநங்கை ப்ரித்திகா யாசினி தொடங்கி, சித்த மருத்துவத்தில் திருநங்கை தாரிகா, சத்துணவு அமைப்பாளர் சாரதா, திருநங்கைகளுக்கான வீடு பெற்று அவர்களுக்கு சுய தொழில் செய்வதற்கான பால் பண்ணையும் பெற்றுத் தந்துள்ளார். இதுபோல பல பேர்களுக்கு தன்னுடைய சட்டப் போராட்டங்களின் மூலமாகப் பணிகளையும் பெற்றுத் தந்துள்ளார்.
கிரேஸ் பானுவின் இச்சேவைகளைப் பாராட்டி, 2021ஆம் ஆண்டுக்கான, தமிழக அரசின் சிறந்த மூன்றாம் பாலினர் விருது வழங்கப்பட்டுள்ளது. முதன் முதலாக, இவ்விருதைப் பெற்ற கிரேஸ்பானுவுக்கு, 1.லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை, முதல்வர் ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார்.
இது குறித்து பேசிய திருநங்கை கிரேஸ் பானு, “முதன் முதலாக இது போன்ற விருதை அறிமுகப்படுத்திய தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் திருநர் சமூகத்தின் சார்பாக வாழ்த்துகளையும் நன்றியையும் தெறிவித்துக் கொள்கிறேன். மேலும் இவ்விருதை சாதிக்க போராடிக்கொண்டிருக்கும் இளம் தலைமுறை திருநர் மக்களுக்கும், தென்னிந்திய கூட்டமைப்பு தலைவி திருமதி மோகனாம்பாலுக்கும் சமர்பிக்கிறேன். இது போன்று தொடர்ந்து எங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் திமுக அரசு, எங்களுடைய பல ஆண்டு கோரிக்கையான திருநர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து விரைவில் தீர்வு காணும் எனும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்றார்.