மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தவறி கீழே விழுந்த நிலையில் அவருக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இந்நிலையில் தொண்டர்களுடன் உரையாற்றும் வகையில் வைகோ மருத்துவமனையில் இருந்தபடியே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் துரை வைகோ வெளியிட்ட எக்ஸ் சமூக வலைத்தள பதிவில், 'மதிமுக இயக்கத் தந்தை தலைவர் வைகோ நலம் பெறுவார்; மதிமுகவின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் சகோதரர் வெற்றிவேலின் மகள் மண விழாவில் பங்கேற்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று திருநெல்வேலி வருகை தந்தார்கள். அப்பொழுது எதிர்பாரா விதமாக இரவு வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.
மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து சென்னை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். சிறிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு வைகோ அவர்கள் உடல்நலம் பெறுவார்கள்; வேறு அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தபடியே வீடியோ ஒன்றை பேசி வைகோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''அன்புள்ளம் கொண்ட தமிழ் பெருமக்களே, தமிழகத்தில் பொது ஊழியம் செய்கிற ஒரு சாதாரண தொண்டனாகிய இந்த வைகோ ஏறத்தாழ 7 ஆயிரம் கிலோமீட்டர் நடந்திருக்கிறேன். ஆனால் கீழே விழுந்ததில்லை. இப்பொழுது நான்கு நாட்களுக்கு முன்னால் நெல்லைக்குச் சென்ற இடத்தில் தங்கியிருந்த வீட்டின் படிகளின் வழியாக ஏறாமல் பக்கத்தில் இருக்கக்கூடிய திண்ணையில் ஏறினேன். அப்படியே இடது புறமாக சாய்ந்து விட்டேன். எனக்கு தலையில் அடிபட்டிருந்தாலோ, முதுகெலும்பில் அடிபட்டிருந்தாலோ நான் இயங்க முடியாமல் போயிருப்பேன். இடது தோள்பட்டையின் கிண்ணம் உடைந்து இருக்கிறது. அதோடு அந்த எலும்பும் கீறி இருக்கிறது. உடனே மருத்துவரிடம் காண்பிக்க அவர்கள் உடனே நீங்கள் சென்னைக்கு போக வேண்டும், அங்கே நீங்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள்.
பயப்பட வேண்டாம் உங்களுக்கு ரெஸ்ட் தேவை. உங்களுக்கு ரெஸ்ட் இதில் கிடைத்திருக்கிறது என்று சொன்னார்கள். ஒருவேளை எனக்கு நாளைக்கே அறுவை சிகிச்சை நடைபெற்று அந்த கிண்ணம் தோள்பட்டையில் இருந்து விலகி இருக்கிறதல்லவா அதை திரும்ப பொருத்தி விட்டு, அதோடு சேர்ந்து எலும்பும் ஒரு இரண்டு சென்டிமீட்டர் உடைந்திருக்கிறது அதற்கும் சேர்த்து நாளைக்கு அறுவை சிகிச்சை செய்யலாம் என்று அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆகவே நான் நன்றாக இருக்கிறேன். முழு ஆரோக்கியத்தோடு இருக்கிறேன். எனக்கு முன்புபோல இயங்க முடியுமா என்ற ஐயம் யாருக்கும் வர வேண்டாம். நான் உழைப்பு என்பதற்கு இலக்கணமாக இருக்கக்கூடியவன் என்பதை கலைஞரே சொல்லி இருக்கிறார். ஆகவே நம்முடைய தோழர்கள், பொதுவாழ்வில் அக்கறை உடையவர்கள் எல்லோருக்கும் நான் சொல்லிக் கொள்வது இந்த நாட்டில், மேலும் தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டிய சேவைகள் செய்வதற்கு காத்திருக்கும் வைகோ, முழு நலத்தோடு ஆரோக்கியத்தோடு வருவேன். எனக்காக கவலைப்படுகிற உள்ளங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்பதையும் இந்த நேரத்தில் சொல்கிறேன்'' என உருக்கமாக பேசியுள்ளார்.