
அண்மையில் பஞ்சுமிட்டாயில் இடம்பெற்றுள்ள செயற்கை நிறமி புற்றுநோயை உருவாக்கும் கூறுகளைக் கொண்டது எனக் கண்டறியப்பட்ட நிலையில் அவை தடை செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகாவில் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் செயற்கை நிறமிகள் பானி பூரி மசாலாவில் கலக்கப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில் தமிழகத்திலும் தீவிர சோதனைகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் சோதனையைத் தீவிரப்படுத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் செட்டி வீதி பகுதியில் உள்ள 'ஸ்ரீபகவதி அம்மன் பானி பூரி' கடையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மொத்தமாகவும் சில்லறையாகவும் பானிபூரி விற்பனை செய்யும் கடையில் நடந்த ஆய்வில் அதிகாரிகளுக்கு பல்வேறு அதிர்ச்சிகள் காத்திருந்தது.

கடையின் உள்ளே ஒரு பகுதியின் மூலையில் பானி பூரி கீழே தரைதளத்தில் கொட்டி வைக்கப்பட்டு சுகாதாரமற்ற முறையில் கிடந்தது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. 'ஏங்க இப்படியா பானிபூரிய கீழ கொட்டி வைப்பீங்க? உங்களுக்கே நல்லா இருக்கா இதெல்லாம். சாப்பிடற பொருள் இப்படி கீழ தரையில் கொட்டி வச்சிருக்கீங்க. இதை அப்படியே எடுத்து கவரில் போட்டு கொடுத்து விட வேண்டியதுதானா? அட்லீஸ்ட் ஒரு ட்ரம் அல்லது பாலிதீன் கவருக்குள் போட்டு வைக்க வேண்டாமா?' என அதிகாரி கேள்விகளை எழுப்பினார். ''உடனே இதெல்லாம் சீஸ் பண்ணுங்க? எங்கேயுமே இப்படி பார்க்கலப்பா இப்படி கீழே கொட்டி வச்சிருக்கீங்க. நான் இதை விட சின்னதா பானி பூரி செய்ற இடத்தில் கூட ஆய்வு செய்யப் போயிருக்கேன். அவர்கள் கூட கீழே போட்டது கிடையாது'' என்றார்.
அதனைத் தொடர்ந்து பானி பூரி தயாரிக்கப் பயன்படுத்தும் எண்ணெய்யை ஆய்வு செய்த அதிகாரி 'ஆயில பார்த்தாவே தெரியுது எத்தனை தடவை இதை யூஸ் பண்ணிருப்பீங்க. நீங்களே பாருங்க இந்த ஆயில் எப்படி இருக்குன்னு. ஒரு முறை அல்லது இரண்டு முறை தான் ஆயில பயன்படுத்த வேண்டும். தேவையான அளவு ஆயில் பயன்படுத்தி விட்டு பின்னர் அதனை அழித்துவிட வேண்டும் என்று எச்சரித்தார்.