சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் இன்று (05/07/2022) காலை 11.00 மணியளவில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நான் படித்த மாநில கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மாநில கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் வாழ்த்த வந்துள்ளேன். சீனியர் என்ற முறையில் மாணவர்களை வாழ்த்த வந்திருக்கிறேன். மாநில கல்லூரியில் அரசியல்- அறிவியல் படித்தேன். மிசா சட்டத்தில் சிறையில் இருந்த போது, காவல்துறை பாதுகாப்புடன் கல்லூரி தேர்வு எழுதினேன்.சமூகநீதி கல்லூரியாக மாநில கல்லூரி திகழ்கிறது. கல்வி தான் யாராலும் திருட முடியாத சொத்து'' என்றார்.
இந்த நிகழ்வில் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டார். மேடையில் அவர் பேசுகையில், ''நேற்று இரவு முழுக்க நான் இந்த கல்லூரியுடைய வரலாற்றைப் பற்றித் தெரிந்துகொண்டு பேசுவதற்கு குறிப்புகளை எல்லாம் எடுத்து வந்திருந்தேன். ஆனால் அது அத்தனையையுமே கல்லூரி முதல்வர் ராமன் பேசிவிட்டார். எனவே பேசுவதற்கு இப்பொழுது எதுவுமே இல்லை. இந்த மாதிரி அங்கி அணிந்திருப்பது எனக்கு இதுதான் முதல் முறை. என்னுடைய பட்டமளிப்பு விழாவிற்கு கூட நான் அங்கியெல்லாம் போட்டுக்கொண்டு செல்லவில்லை. எனவே இந்த வாய்ப்பை வழங்கிய முதல்வருக்கும், அமைச்சர் பொன்முடிக்கும், கல்லூரி முதல்வருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பட்டம் வாங்க வந்திருக்கும் மாணவர்கள், அவரது பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள் அத்தனை பேருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இங்கு வரும்பொழுது மாணவர்கள் ஒரு கோரிக்கையை வைத்தார்கள். இங்கே இருக்கக்கூடிய கேண்டீன் வசதி சேதப்படுத்தப்பட்டுள்ளது அதை சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். முதல் வேலையாக நானும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனும் இணைந்து வெகு விரைவில் சரி செய்து தருவோம் எனக் கூறிக் கொள்கிறேன்'' என்றார்.