Skip to main content

“சமூகநீதியின் வெற்றியைக் கண்டு பெருமைப்படுகிறேன்” - அமைச்சர் எ.வ.வேலு

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
I am proud to see the victory of social justice Minister eV Velu

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீபதி. ஏழ்மை குடும்பப் பின்னணியில் வளர்ந்த ஸ்ரீபதி கல்வியின் முக்கியத்துவம் கருதி வறுமையிலும் போராடிக் கல்வி கற்று பி.ஏ.பி.எல் சட்டப்படிப்பை முடித்தார். சட்டப்படிப்பு படிக்கும் போது ஸ்ரீபதிக்கு திருமணமான நிலையில் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. சிவில் நீதிபதி தேர்வு நடைபெற்றது. இந்தச் சமயம் ஸ்ரீபதி  கருவுற்று இருந்தார். எப்படியாவது தேர்வை எழுதிவிட வேண்டும் என்று நினைத்த ஸ்ரீபதிக்கு, தேர்வு தேதியும், பிரசவ தேதியும் ஒரே நாளில் வந்தது பெரும் அதிர்ச்சியைத் தந்தது.

சற்றும் மனம் தளராத ஸ்ரீபதிக்கு தேர்வுக்கு ஒரு நாள் முன்பே பிரசவமாகி குழந்தை பிறந்துள்ளது. பொதுவாக குழந்தை பிரசவமான பெண்களுக்கு அவரது வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்ப சில வாரங்களாகும். தன்னுடைய லட்சியத்தில் உறுதியாக இருந்த ஸ்ரீபதி பிரசவமான இரண்டாவது நாளே தன்னுடைய கணவர் உதவியுடன் சென்னைக்கு காரில் வந்து சிவில் நீதிபதி தேர்வை எழுதினார். வலிகளுக்கு இடையே தேர்வை எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தார். அவர் மட்டுமல்ல அவரது குடும்ப உறவினர்களும் கூட தேர்வின் முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். நீண்ட உழைப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் கைமேல் பலன் கிடைத்தது போன்று சமீபத்தில் சிவில் நீதிபதி தேர்வு முடிவுகள் வெளியாகியது. பெரும் பதற்றத்துடன் முடிவுகளைப் பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீபதிக்கு தேர்வின் முடிவு சாதகமாக அமைந்தது. டி.என்.பி.எஸ்.சி தேர்வில் ஸ்ரீபதி வெற்றி பெற்றிருந்தார்.  இதன் மூலம் தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின பெண் சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார் மரியாதைக்குரிய நீதிபதி ஸ்ரீபதி.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் நீதிபதி ஸ்ரீபதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் எ.வ. வேலு நீதிபதி ஸ்ரீபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “‘கேடில் விழுச் செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை’என்ற அய்யன் திருவள்ளுவரின் வாக்கிற்கேற்ப, அழிவில்லாத சிறந்த செல்வம் கல்விச் செல்வமே என்பது புலனாகிறது. அத்தகைய கல்விச் செல்வத்தை, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசுப் பணிகளில் முன்னுரிமை என  கலைஞர் பிறப்பித்த ஆணையின் வழியே படித்து  திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜவ்வாது மலையில், மலைவாழ் மக்கள் வசிக்கும் புலியூர் என்ற கிராமத்தில் வசிக்கும்  ஸ்ரீபதி வழக்கறிஞர் பட்டம் பெற்றுள்ளார்.

I am proud to see the victory of social justice Minister eV Velu

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதி பணிக்கான தேர்வில் வெற்றி பெற்று உரிமையியல் நீதிபதியாக பதவி வகிக்க உள்ளதை அறிந்து, வாழ்த்தி, மகிழ்கிறேன். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கட்டி காத்து வரும் சமூகநீதியின் வெற்றியைக் கண்டு பெருமைப்படுகிறேன். உங்களது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற, குடும்பத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்