சென்னை கொளத்தூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (31.7.2024) நடைபெற்றது. அந்த வகையில் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அக்கல்லூரியில் பயிலும் 748 மாணவ, மாணவியர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளையும் வழங்கினார். அதோடு 3 உதவிப் பேராசிரியர்கள், ஒரு உடற்கல்வி இயக்குநர், ஒரு கண்காணிப்பாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உதவிகள் கோரி மனுக்கள் அளித்த 147 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள், தையல் இயந்திரங்கள் மற்றும் மூக்குக் கண்ணாடிகளையும் வழங்கினார். மேலும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் கொளத்தூரில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரத்த சுத்திகரிப்பு (Dialysis) மற்றும் மறுவாழ்வு மையம் மற்றும் பகிர்ந்த பணியிடத்திற்கான கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நான் கேரளா முதலமைச்சரிடம் பேசினேன். சேதாரத்தை இன்னும் கணக்கெடுக்க முடியவில்லை என்றும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சொன்னார். தமிழ்நாடு அரசின் சார்பாக எந்த உதவிகளும் செய்கிறோம் என்று சொல்லியிருக்கிறோம். அதற்காக இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் மருத்துவக் குழு அனுப்பியிருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், தமிழக அரசின் சார்பில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் பணமும் அனுப்பியிருக்கிறோம். தேவைப்பட்டால் இன்னும் சொல்லியிருக்கிறோம். உதவிகள் செய்கிறோம் என்று சொல்லிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள், ‘ஆளுநரின் பதவிக் காலம் முடியப் போகிறது. அவருக்கு மீண்டும் ஆளுநர் பதவி கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறார்கள். அது பற்றி உங்கள் கருத்து என்ன?’ எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நான் ஜனாதிபதியும் இல்லை, பிரதமரும் இல்லை” எனப் பதிலளித்தார்.