திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே இருக்கும் குரும்பப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சென்ராயன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். தனது கணவர் தற்கொலை செய்துகொண்டதாக அவரது மனைவி வனிதா கொடுத்த புகாரின் அடிப்படையில், சந்தேக மரணமாக வழக்குப் பதிவுசெய்த நிலக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் சென்ராயனின் தந்தை மொக்கை ராஜ், தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட நிலக்கோட்டை போலீசாருக்கு சென்ராயன் மனைவி வனிதாவின் நடவடிக்கையின் மேல் சந்தேகம் ஏற்பட்டது. வனிதாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. வனிதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் அய்யனார் என்பவருக்கும் திருமணத்தை மீறிய தொடர்பு இருந்துள்ளது. சென்ராயனுக்கு தெரியாமல் இருவரும் பல மாதங்கள் தனிமையில் வாழ்ந்துள்ளனர். ஒரு கட்டத்தில் விஷயம் சென்ராயனுக்கு தெரிய வரவே, அவர் வனிதாவை கண்டித்துள்ளார். தனது காதலுக்கு இடைஞ்சலாக கணவர் இருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வனிதா, சம்பவத்தன்று இரவு ஆண் நண்பர் அய்யனாரை வீட்டுக்கு வரவைத்துள்ளார்.
உறங்கிக்கொண்டிருந்த சென்ராயனை இருவரும் சேர்ந்து கொலை செய்துவிட்டு, சென்ராயன் தற்கொலை செய்துகொண்டதுபோல் தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். மறுநாள் காலை கணவர் தற்கொலை செய்துகொண்டதாக கதறி அழுது வனிதா நாடகமாடியுள்ளார். நிலக்கோட்டை போலீசார் விசாரணையில் வனிதா அனைத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், வனிதாவை கைது செய்து நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இக்கொலை வழக்கில் தொடர்புடைய பழைய வத்தலக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் அய்யனாரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்றுவிட்டு நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.