
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் மனைவி சாப்பாடு கேட்டும் போடாததால் ஆத்திரத்தில் கணவர் மனைவி மீது குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்த வல்லம் பகுதியில் உள்ள கலைஞர் காலனியில் வசித்து வருபவர்கள் சந்தனகுமார்-கௌசல்யா தம்பதி. கடந்த செவ்வாய்க்கிழமை இந்த பகுதியில் மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. அந்த நேரத்தில் திருவிழாவிற்கு செல்வதற்காக கௌசல்யா அவசரத்தில் இருந்துள்ளார். அப்பொழுது வீட்டிற்கு வந்த கணவர் சந்தனகுமார் சாப்பாடு போடும்படி கேட்டுள்ளார். 'வேணும்னா போட்டு சாப்பிடுங்க' என மனைவி கௌசல்யா கூறியதாகக் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் போட்டு உடைக்கும் அளவிற்கு சென்றுள்ளது. இதனால் ;கோயிலுக்கு போகாதே; என தடுத்துள்ளார் கணவர் சந்தனகுமார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கௌசல்யா கோவிலுக்கு புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்பொழுது வீட்டில் தயாரித்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து சந்தனகுமார் வீசி உள்ளார். இதில் கௌசல்யா தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தென்காசி மாவட்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் எட்டு தையல்கள் போடப்பட்டு பெண்களுக்கான தனிப்பிரிவில் சிகிச்சை நடைபெற்று வருகிறது. இது குறித்து தகவலறிந்த செங்கோட்டை காவல் நிலைய போலீசார் நாட்டு வெடிகுண்டு வீசிய கணவர் சந்தன குமாரை கைது செய்து விசாரித்ததில் காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை வீட்டில் தயாரித்து வைத்திருந்ததாகவும், சாப்பாடு போட்டு தர மாட்டேன் என மனைவி தெரிவதால் ஆத்திரத்தில் நாட்டு வெடிகுண்டை வீசியதாகவும் சந்தனகுமார் தெரிவித்துள்ளார்.