Skip to main content

மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி!

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

Husband and wife passes away by electricity!

 

நாமக்கல் அருகே, தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முயன்றபோது மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி இருவரும் பரிதாபமாக பலியாயினர்.

 

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள பழையபாளையம் கோம்பையைச் சேர்ந்தவர் சிவபாரதி. இவருக்குச் சொந்தமான விவசாய தோட்டத்தை, கொல்லிமலை திண்ணனூர் நாடு பெரிய சோளக்கண்ணிப்பட்டியைச் சேர்ந்த மனோகரன் (47) என்பவர் குத்தகைக்கு எடுத்து இருந்தார். அந்த தோட்டத்தில் தனது மனைவி செல்வி (42), மகன் யஷ்வந்த் (6) ஆகியோருடன் தங்கியிருந்து விவசாயப் பணிகளைச் செய்து வந்தார்.  

 

இந்நிலையில், மே 28 ஆம் தேதி மாலை வழக்கம்போல் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்திற்குச் சென்றார் மனோகரன். அவர் மின் மோட்டார் பொத்தானை அமுக்கியபோது, திடீரென்று உடலில் மின்சாரம் பாய்ந்ததில் அலறினார். சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அவருடைய மனைவி கணவரைப் பிடித்து இழுத்தபோது அவருடைய உடலிலும் மின்சாரம் பாய்ந்தது. கணவன், மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

 

தாய், தந்தை இருவரும் இறந்து கிடந்ததைப் பார்த்து சிறுவன் யஷ்வந்த் கத்திக் கூச்சலிட்டான். அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் இதுகுறித்து சேந்தமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து வந்து சடலங்களைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அப்பாவையே அடித்துக்கொன்ற மகன்; விசாரணையில் அதிர்ச்சி

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
The son who attacked his father, shocked in the investigation

சொத்துக்காக தந்தையை மகனும் மருமகனும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில் வசித்து வந்தவர் செல்வம். பேருந்து ஓட்டுனரான செல்வத்தைக் காணவில்லை என அவருடைய மருமகள் சசிகா கடந்த மூன்றாம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் சொத்து பிரச்சனை காரணமாக மகனும் மருமகனும் ஒன்று சேர்ந்து செல்வத்தை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.

திருச்செங்கோடு அருகே திம்மராவுத்தம்பட்டி ஏரி பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் கொலை செய்த செல்வத்தின் உடலை புதைத்ததாக இருவரும் போலீசாருக்கு வாக்குமூலம் கொடுத்தனர். அதனடிப்படையில் அந்தப் பகுதிக்குச் சென்ற போலீசார் செல்வத்தின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து தோண்டி எடுத்து, உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக செல்வத்தின் மகன், மருமகன் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேர் என ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். சொத்து தகராறு காரணமாக அப்பாவையே மகனும், மருமகனும் ஒன்று சேர்ந்து கொலை செய்தது அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Story

ஊர்காவல் படையினர் மீது போதை இளைஞர்கள் தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
Intoxicated youth attack policemen; A viral video

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் போதை இளைஞர்கள் இருவர் பொது இடத்தில் ஊர்காவல் படையினருடன் சண்டையிட்டு மோதிக் கொள்ளும் பரபரப்பு காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த சகோதரர்கள் விஜயன்-தாமரைக் கண்ணன். இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது அண்ணாசிலை அருகே கூட்டம் அதிகமாக இருந்ததால் திடீரென பிரேக் அடித்தனர். இதில் இருவரும் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து வழுக்கி விழுந்தனர்.

அப்போது அங்குப் பாதுகாப்பது பணியிலிருந்த ஊர்காவலர் படையினர் இருவரையும் விசாரிக்க வேண்டும் என அழைத்தனர். விசாரணையில் இருவரும் போதையிலிருந்தது தெரிந்தது. ஊர்காவல் படையினருடன்  இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் கூட்டம் கூடியது. இருப்பினும் விடாத சகோதரர்கள் இருவரும் ஊர்காவல் படையினரிடம் தொடர்ந்து கண்மூடித்தனமாகத் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.