Skip to main content

கணவருடன் தகராறு: மனைவியின் அவசர முடிவால் சோகத்தில் மூழ்கிய கிராமம்!

Published on 16/02/2022 | Edited on 16/02/2022

 

husband and wife incident police investigation

 

சேலம் அருகே, கணவருடன் ஏற்பட்ட தகராறில், பெற்ற தாயே மகன்கள் இருவரையும் கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு, தானும் அதே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒரு கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள கே.மோரூர் காட்டு வலவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 32). விவசாயி. இவருடைய மனைவி மரகதம் (வயது 30). இவர்களுக்கு செல்வகணபதி (வயது 7), கோகுலகண்ணன் (வயது 5) ஆகிய இரு மகன்கள் இருந்தனர். 

 

கணவன், மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. திருமணம் ஆனது முதலே அவர்களுக்குள் ஏழாம் பொருத்தமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை (பிப். 14) காலையில் அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

 

கோபம் அடைந்த கணவன், வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். மனம் விரக்தி அடைந்த நிலையில் இருந்த மரகதம், இனியும் கணவருடன் வாழ்ந்து பயனில்லை எனக் கருதி, குழந்தைகளுடன் இறந்துவிட முடிவெடுத்துள்ளார். 

 

இதையடுத்து, தனது இரு மகன்களையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு பின்னால் உள்ள கிணற்றுக்குச் சென்றுள்ளார். மகன்கள் இருவரையும் முதலில் கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். அதன்பிறகு அவரும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  

 

வெளியே சென்ற கணவன் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, அங்கே மனைவியும், குழந்தைகளும் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். சந்தேகத்தின்பேரில் கிணற்றடிக்குச் சென்று பார்த்தபோது கிணற்றில் குழந்தைகள் அணிந்திருந்த துணிமணிகள் மிதந்தது தெரிய வந்தது. 

 

குழந்தைகளுடன் மனைவியும் கிணற்றில் குதித்து இறந்திருக்கலாம் என சந்தேகம் அடைந்த பிரபாகரன், அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். அவர்கள் கிணற்றில் தேடிப்பார்த்தும் சடலங்களை மீட்க முடியவில்லை. இதையடுத்து காடையாம்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கும், தீவட்டிப்பட்டி காவல்நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. 

 

தீயணைப்பு வீரர்கள் 60 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் இருந்து குழந்தைகள் மற்றும் மரகதம் ஆகியோரின் சடலங்களை மீட்டனர். காவல்துறையினர் சடலங்களை மீட்டு, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பிரபாகரன், உறவினர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. குடும்பத் தகராறில் மகன்கள் இருவரையும் கிணற்றில் தள்ளி கொன்று விட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கே.மோரூர் காட்டு வலவு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்