
திமுக தலைவர் கலைஞர் குடும்பம் குறித்து எச்.ராஜாவின் சர்ச்சை கருத்துக்கு அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தன் டிவிட்டர் பதிவில் கூறியதாவது, தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் எச்.ராஜாவின் கருத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளே வருத்தம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இதுகுறித்து நேற்று காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன்,
எச்.ராஜாவின் கருத்து கண்டனத்திற்குரியது. ஒரு தனிப்பட்ட நபர் மீதான விமர்சனங்களை வைப்பதன் மூலம் அவர் எப்படி ஒரு ஆளாக இருக்கிறார் என்பதை பார்க்கிறோம். ஒரு பெண்ணை தவறுதலாக கொச்சைபடுத்துவதன் மூலமாக தான் யார் என்பதை நிரூபித்துவிட்டார் எச்.ராஜா.
நிச்சயமாக நாங்கள் யாருக்கும் ஆதரவாக இல்லை. இந்த பிரச்சனை குறித்து வழக்குகள் தொடர்ந்தால், நடவடிக்கை குறித்து முதல்வர் முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.