கடந்த 2019ஆம் ஆண்டு திருச்சி லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதைப்போன்று, கடந்த 15ஆம் தேதி நள்ளிரவு வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள தனியார் நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில், கடையின் பின்பக்க சுவரை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், நகைகளைத் திருடிய சம்பவம் நிகழ்ந்தது.
இதுதொடர்பாக போலீசார் 8 தனிப்படை அமைத்து விசாரித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அக்கடையில் 15 கிலோ தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகள் கொள்ளை போனதாக தகவல்கள் வெளியாகின. கொள்ளை தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக அணைக்கட்டு பகுதியை அடுத்த குச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த டி.கா. ராமன் என்ற 28 வயது இளைஞரைத் தனிப்படை காவல்துறையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19.12.2021) கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அவனிடம் திருடப்பட்ட நகை குறித்து விசாரணை செய்யப்பட்ட நிலையில், நகை உருக்கப்பட்டு சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்தான். முதலில் முன்னுக்குப் பின்னான தகவலைக் கொடுத்த டி.கா. ராமன், இறுதியில் ஒடுக்கத்தூர் அருகே உள்ள உத்திர காவேரி ஆற்றங்ரையில் உள்ள ஒரு சுடுகாட்டில் புதைத்ததை தெரிவித்தான். அதனடிப்படையில் அவர் சொன்ன இடத்திற்குச் சென்று நடத்திய சோதனையில், புதைக்கப்பட்டிருந்த 15 கிலோ நகைகளைப் போலீசார் மீட்டனர்.
இந்த திருட்டு தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது. மேலும் அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சத்தம் எழுப்பாமல் சுவரை எப்படி துளையிடுவது என்பது தொடர்பாக யூடியூபில் பார்த்து தெரிந்துகொண்டதாக டி.கா. ராமன் தெரிவித்துள்ளான்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் (19.12.2021) யூடியூப்பை பார்த்து பிரசவம் பார்த்த நிலையில் குழந்தை உயிரிழந்ததுடன் பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பெண்ணின் கணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். தொழில்நுட்பம், மருத்துவம் உள்ளிட்ட வீடியோக்கள் அதிகம் யூடியூப்பில் மலிந்துகிடக்கும் நிலையில், யூடியூப்பிற்கும் தணிக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்களும் மருத்துவர்களும் வலியுறுத்திவருகின்றனர் .