சி.பி.எஸ்.இ பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து தமிழ்நாட்டிலும் கருத்துக் கேட்பு, பல்வேறு கட்ட ஆலோசனைகளை அடுத்து பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. பிளஸ் 2 மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடுவது என்பது தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், 12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு தொடர்பான விவரங்களைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இருந்து 50 சதவீத மதிப்பெண், 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் இருந்து 20 சதவீத மதிப்பெண்கள், பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் 30 சதவீத மதிப்பெண் எடுக்கப்பட்டு பிளஸ் 2 மதிப்பெண் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறை தேர்வு 20 மதிப்பெண், அகமதிப்பீடு 10 மதிப்பெண் என 30 சதவீதமாக கணக்கீடு செய்யப்படும். செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களில் அகமதிப்பீடு மதிப்பெண்ணை 30 மதிப்பெண்ணுக்கு மாற்றி கணக்கீடு செய்யப்படும். இந்தக் கணக்கீட்டில் மதிப்பெண் குறைவு என கருதும் மாணவர்கள் விரும்பினால், பிளஸ் 2 தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்படும். தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் அந்தந்த தேர்வில் பெறும் மதிப்பெண்ணே இறுதி மதிப்பெண்ணாக அறிவிக்கப்படும். தனித்தேர்வர்களுக்கு கரோனா தொற்று காலம் முடிந்தபின் தக்க சமயத்தில் தேர்வு நடத்தப்படும்
பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் பங்கேற்காத மாணவருக்கு பிளஸ் 1 செய்முறைத் தேர்வு மதிப்பெண் மூலம் பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு செய்யப்படும். பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகளில் பங்கேற்காத மாணவருக்குப் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு எழுத்துத் தேர்வின்படி மதிப்பெண் கணக்கீடு செய்யப்படும். பிளஸ் 1 தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்திருந்தால் 35 மதிப்பெண் வழங்கப்படும். பிளஸ் 1, பிளஸ் 2 என எந்தத் தேர்வுகளிலும் (எழுத்து, செய்முறை) பங்கேற்காத மாணவர்கள் தனித்தேர்வர்களாக தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.