
காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ளது. மேலும் அதை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரைக்கும் செல்லும் வகையில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை முதல்வர் ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
ஆய்வுப் பணியை மேற்கொள்வதற்காக நேற்று திருச்சி வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் பொதுமக்கள், ஆட்சியர், தொண்டர்கள் எனப் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் விமான நிலையத்தில் சிறுமி ஒருவர் முதல்வரின் பெயரைச் சொல்லி எங்களுக்கு உதவுங்கள், இருக்க வீடு எதுவுமே இல்லை என்று கோரிக்கை வைத்தார். இதனைக் கேட்ட முதல்வர், ஆட்சியரை அழைத்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும்படி கூறியுள்ளார். பின்பு முதல்வர் சென்ற பிறகு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அந்த சிறுமியின் குடும்பத்தை நேரில் அழைத்து விசாரித்தார். அப்போது அந்த சிறுமியின் தாய், எனது கணவர் இறந்துவிட்டார். அதனால் அவரது சொத்தை கணவர் வீட்டார் தர மறுக்கின்றனர். அதனால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
இதனை அனைத்தையும் கேட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், சிறுமியின் தாயாருக்கு கோவை சொந்த ஊர் என்பதால் அவருக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் கோவையில் வீடு ஒதுக்க கோவை மாவட்ட ஆட்சியருக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார். மேலும் சிறுமி தாயாரின் கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவும் பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து அவரது இரு பிள்ளைகளின் இந்த கல்வியாண்டின் செலவை முழுமையாகத் தனது சொந்த நிதியில் இருந்து கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.