சீனாவில் பிறப்பிடமான கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை எல்லாம் அச்சுறுத்தி வருகின்றது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டிற்கு வரும் சர்வதேச விமானங்களை சோதனைக்குப் பின்பே அனுமதிக்கின்றன. சில நாடுகள் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சர்ச்சைக்குரிய நாட்டு விமானங்களை அனுமதிப்பதில்லை. ஏனெனில் நூற்றுக்கணக்கில் தொடங்கி இது வரையிலும் மொத்தமாக இரண்டாயிரம் வரை கொரோனா பலி உயர்ந்து விட்டது. சீனா உட்பட பல்வேறு நாடுகளில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கையே அச்சத்திற்கு அடிப்படை.
விமான நிலையம் மட்டுமல்ல. நாடுகளின் துறைமுகத்திலும் இதே கதைதான். தமிழகத்தின் தென் மாவட்டத்தில் முக்கிய துறைமுகமான தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு சரக்கு கப்பல்கள் செல்வதோடு, இறக்குமதியின் பொருட்டு பல நாட்டுக் கப்பல்களின் வருகையும் அதிகரிக்கின்றன. கடந்த மாதம், சரக்கு ஏற்றிக் கொண்டு வந்த விவகாரத்திற்குரிய சீன நாட்டுக்கப்பலின் ஊழியர்களை கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என சோதனை செய்யாமல் பெர்த்திற்குள் அனுமதிக்கப்பட்டதாகச் சர்ச்சை எழுந்தது. இந்த விஷயம் பரபரப்பானதால் சோதனைக்கு பின்னர் வைரஸ் தாக்கமில்லை என்று கண்டறியப்பட்டதால் தான் சீன சரக்கு கப்பல் உள்ளே அனுமதிக்கப்பட்டது. என்று ஃபோர்ட் டிரஸ்ட்டின் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
இதனிடையே தற்போது ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட எம்.டி. ஹன்னா என்ற ஆயில் டேங்க்கர் கப்பல் தூத்துக்குடி துறைமுகம் வந்துள்ளது.
இந்தோனேசியாவின் பாடம் துறைமுகத்திலிருந்து வந்த இந்தக் கப்பலில், மாலுமிகள் உட்பட 21 பேர்கள் உள்ளனர். கொண்டு வந்த சரக்கான பாமாயிலை இறக்க துறைமுகத்தின் 2 வது பெர்த்திற்கு வர அனுமதி கேட்ட அக்கப்பல் 26ம் தேதி முதலே துறைமுகத்தின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டது. காரணம் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகமே. இந்நிலையில் துறைமுக மருத்துவக்குழுவினர் அக்கப்பலிலுள்ளவர்களை மருத்துவ ஆய்வு மேற் கொண்டனர். அவர்களுக்கு கொரோனோ தொற்று அரிகுறி இல்லை என்று உறுதியாகத் தெரிந்த பிறகே 8 ஆயிரம் மெட்ரிக் டன் எடை கொண்ட பாமாயிலை இறக்க அனுமதிக்கப்பட்டது.
இது மட்டுமல்ல வெளி நாடுகளிலிருந்து வரும் எந்தக் கப்பலானாலும் சரி, அவைகள் கொரோனோ வைரஸ் தொற்று சோதனைக்குப் பின்பே அனுமதிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட ஹாங்காங் கப்பலின் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்ற பிறகே அனுமதி தரப்பட்டது. அதே சமயம் அந்தச் சரக்குகள் முழுமையாக இறக்கும் வரையிலும் கப்பலின் ஊழியர்கள் யாரும் துறைமுகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை என்ற தடையும் விதிக்கப்பட்டது. என்கிறார் துறைமுகத்தின் துணை மக்கள் தொடர்பு அதிகாரியான முருகன்.
இங்கு மட்டுமல்ல, கொரோனோ வைரஸ் தாக்கத்தின் வீரிய வீச்சு, உலக நாடுகளின் அனைத்துப் பிரிவையும் அலர்ட் செய்திருக்கிறது.