Skip to main content

5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Holiday announcement for 5 district schools and colleges

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

 

இந்த சூழலில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “வங்கக் கடலில் உருவாகி இருக்கும் மிக்ஜாம் புயல் சென்னைக்கு 230 கி.மீ. தொலைவில் கிழக்கு - தென் கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வடமேற்கு திசையில் இந்த புயல் நகர்ந்து நாளை வட தமிழ்நாடு, ஆந்திர கடற்கரையை நெருங்கும். அதன் பின்னர் தீவிரப் புயலாக மாறி டிசம்பர் 5 ஆம் தேதி நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும். இவ்வாறு கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 கி.மீ. முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். சில நேரங்களில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் புயலின் எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (04.12.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பொது விடுமுறை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை (04.12.2023) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தமிழகத்தில் 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Chance of rain in 32 districts of Tamil Nadu

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே மேற்கு திசை காற்று வேகமாறுபாடு காரணமாகத் தமிழகத்தில் இன்று(12.7.2024) முதல் 18 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கோவை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர் உள்ளிட்ட 32 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

4 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Rain alert for 4 districts

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் காலை 10 மணி வரை நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிகபட்சமாக 7.8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் செங்குன்றத்தில் 7.5 சென்டிமீட்டர் மழையும். ஆவடியில் 7.3 சென்டிமீட்டர் மழையும், சோழவரத்தில் 5.4 சென்டிமீட்டர் மழையும், தாமரைப்பாக்கத்தில் 4.8 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, செங்குன்றம், சோழவரம், ஆவடி, தாமரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது.