![Hogenakkal](http://image.nakkheeran.in/cdn/farfuture/ELMIq5Bhj8jmSS49dG_Gu5-yqVN56jzm55mv-RuNLZ4/1590934908/sites/default/files/inline-images/803_4.jpg)
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர் வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
கடந்த 20ஆம் தேதி முதல் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், திடீரென்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நேற்று (மே 30) நீர் வரத்து 1,500 கன அடியாகச் சரிந்தது. பின்னர் நேற்று இரவு முதல் கர்நாடகாவில் மழைப்பொழிவு வலுத்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் முதன்மை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணைக்கும் நீர் வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று வினாடிக்கு 2,250 கன அடியாக இருந்த நீர் வரத்து, ஞாயிற்றுக்கிழமை (மே 31) காலையில் 2,389 கன அடியாக வரத்து உயர்ந்துள்ளது. அதேநேரம், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 65.96 டி.எம்.சி. ஆக உள்ளது.