தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் கர்நாடகாவின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ததன் காரணமாக காவிரியில் நீர் திறப்பு அதிகரித்துள்ளது. தற்பொழுது காவிரியில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாகவே அதிகப்படியான நீர் திறக்கப்பட்டு வருவதால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் வினாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடி என நீர்வரத்து உள்ளது.
இதனால் ஒகேனக்கல் பகுதியில் பிரதான நடைமேடை, ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து பகுதிகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கடந்த காலங்களில் காவிரியில் நீர் திறப்பால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் குறைந்தும் காணப்படும். ஆனால் கடந்த மூன்று நாட்களாக ஒரே சீராக ஒகேனக்கல்லுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் வரத்து என்பது குறிப்பிடத் தகுந்ததாக உள்ளது. இதனால் காவேரி ஆற்றங்கரையில் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.