சேலத்தில் மூட்டை மூட்டையாக குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கிடங்கில் ரகசியமாகப் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக கிடங்கு உரிமையாளர் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் அன்னதானப்பட்டி மூலைப்பிள்ளையார் கோயில் அருகே, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பதுக்கி, விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர், அதே பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவருக்குச் சொந்தமான ஒரு கிடங்கில் சோதனை செய்தனர். அந்த கிடங்கில் மூட்டை மூட்டையாக குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அங்கிருந்து மொத்தம் 30 மூட்டைகளில் குட்காவை காவல்துறையினர் கைப்பற்றினர். அவற்றின் மொத்த மதிப்பு 5 லட்சம் ரூபாய்.
புகையிலை பொருட்களை கடை கடைக்கு ரகசியமாக விற்பனை செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த ஹிதீஷ்குமார் (வயது 29), சரவணக்குமார் (வயது 28), வர்ஜிங்ராங் (வயது 24) மற்றும் 17 வயது சிறுவன், கிடங்கு உரிமையாளர் அன்பழகன் (வயது 51) ஆகிய ஐந்து பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.