சேலம் அருகே 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த சதி கல் மற்றும் வாமனக்கல் ஆகியவற்றை வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து சேலம் வரலாற்று ஆய்வு மையத்தலைவர் ஆறகழூர் வெங்கடேசன் கூறியது, சதி எனப்படும் உடன்கட்டை ஏறும் பழக்கம் இதிகாச காலத்திலேயே இருந்து வந்துள்ளது. சோழர்கள் காலத்திற்குப் பின் சதி கற்கள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டாலும், விஜயநகர பேரரசுக்குப் பின்னர் மிக அதிகளவில் கிடைத்துள்ளன.
சதி கற்களை இரண்டு வகைப்படுத்தலாம். கணவன் இறந்த பின் உயிர்விடும் மனைவிக்கு எடுக்கப்படும் நடுகல் முதல் வகை. கணவனுடன் வா-ழும் பெண்ணோ, கைம்பெண்ணோ கற்புக்கு பங்கம் நேரும்போது தீயில் விழுந்து தன் கற்பை நிலை நாட்டுதல் இரண்டாவது வகை ஆகும். இவர்களுக்கு சில இடங்களில் கோயில்களும் எழுப்பப்பட்டு உள்ளன. அத்தகைய கோயில்களைத்தான் தீப்பாஞ்சாயி கோயில்கள் என்கிறோம்.சதி கற்களில் கைகளில் வளையல் அணிந்த பெண் சிற்பம் காணப்படும். கணவனுடன் சேர்ந்து இறந்ததை இந்த வளை அணிந்த கை உணர்த்தும். பிற்காலத்தில் ராஜா ராம் மோகன்ராய் முயற்சிகளால் சதி எனும் நடைமுறை ஒழிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் வட்டமுத்தான்பட்டியில் உள்ள சதிகல் ஒரு சதுர வடிவமான கல்லில் புடைப்புச்சிற்பமாக வடிக்கப்பட்டு இருந்தது. இதன் உயரம் 68 செ.மீ., இதில், வெட்டப்பட்டுள்ள வீரனின் 56 செ.மீ., பெண்ணின் உயரம் 50 செ.மீ. ஆகும். வீரனுக்கு அள்ளிமுடிந்த வட்டவடிமான கொண்டை காட்டப்பட்டு உள்ளது. இதுபோன்ற கொண்டை அமைப்பு கெட்டி முதலிகள் காலத்தில் இருந்தது. கொண்டையை கட்டியிருக்கும் கயிறு, இடதுபுறம் பறக்கும் நிலையில் உள்ளது. நீண்ட காதுகளில் அணிகலன்கள் உள்ளன.
கழுத்தில் சவடி, சரபளி போன்ற அணிகலன்கள் உள்ளன. இரு புஜங்களிலும் தோள்வளையம் உள்ளது. வலது கையில் வாளினை பற்றியவாறும், வாள் முனை பூமியை நோக்கியும் உள்ளது. இடது கையானது தொடையின் மேல்பகுதியில் வைத்த நிலையில் கடியஸ்த முத்திரையில் உள்ளது. இது போருக்குச் செல்லும் நிலையைக் குறிப்பதாகும். அரையாடை காட்டப்பட்டுள்ளது. வலது கால் நேராகவும், இடது கால் முட்டி சற்று புடைத்து முன்னோக்கிய நிலையிலும் உள்ளது. வீரனின் இடதுபுறம் வீரனின் மனைவி இரு கரங்களையும் கூப்பி வணங்கிய நிலையில் உள்ளனர். இடது பக்கம் கூந்தல் அள்ளி முடியப்பட்டுள்ளது. காதுகளில் அணிகலன், கழுத்தணி, தோள் வளையம் உள்ளன. வளையல் அணிந்துள்ளாள். மார்புக்கச்சை காட்டப்படவில்லை. காலில் கழல் காட்டப்பட்டிருக்கிறது.
வட்டாமுத்தான்பட்டி பகுதியை கி.பி. 16ம் நூற்றாண்டில் கெட்டிமுதலி வம்சத்தினர் அமரகுந்தியை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தனர். கி.பி. 1667ஆம் ஆண்டுகளில் மதுரை நாயக்க மன்னருக்கும், மைசூர் மன்னருக்கும் போர் நடந்தது. அந்தப் போரில் கெட்டிமுதலி மன்னர், மதுரை நாயக்கர் சார்பில் கலந்து கொண்டார். அந்தப் போரில் இறந்த வீரருக்கு எடுக்கப்பட்ட நடுகல்லாக இது இருக்கலாம். மனைவியின் உருவமும் இருப்பதால் இது ஒரு சதி கல்லும் ஆகும். மன்னர்கள் காலத்தில் சிவன், பெருமாள் கோயில்களில் பூஜை செய்யவும், விளக்கு ஏற்றவும் நிலங்களை கோயில்களுக்கு தானமாக கொடுப்பது நடைமுறையில் இருந்தது.
சிவன் கோயிலுக்கு நிலம் தானமாக கொடுக்கப்பட்டால் அதன் எல்லையைக் குறிக்க சூலக்கல் நடப்படும். பெருமாள் கோயிலுக்கு தானம் கொடுத்திருந்தால் எல்லைகளில் திருவாழிக்கல் நடப்படும்.சேலத்தை அடுத்துள்ள கோட்டைகவுண்டன்பட்டியில் வாமனக்கல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்தக் கல்லின் உயரம் 90 செ.மீ., அகலம் 50 செ.மீ., வாமனன் உருவம், புடைப்புச்சிற்பமாக செதுக்கப்பட்டு உள்ளது. வாமனன உயரம் 35 செ.மீ., அகலம் 20 செ.மீ., ஆக உள்ளது.
வாமனின் இடது கையில் குடையும், வலது கையில் கமண்டலமும், மேற்பகுதியில் சூரியனும், பிறை நிலாவும் காட்டப்பட்டுள்ளது. சூரியன், சந்திரன் உள்ளவரை இந்த தானத்தை யாரும் அழிக்கக்கூடாது என்பது இதன் பொருளாகும்.பெருமாளின் ஐந்தாவது அவதாரம்தான் வாமன அவதாரம். மகாபலி சக்கரவர்த்தியின் கர்வத்தை அடக்கும் வகையில் வாமனன் குள்ள வடிவம் கொண்டு, மூன்று அடி நிலம் கேட்பார். ஒரு அடியில் வானத்தையும், இரண்டாவது அடியில் பூமியையும் அளந்துவிட்டு மூன்றாவது அடியை வைக்க இடமின்றி அந்த அடியை மகாபலியின் தலையில் வைத்ததாக புராணங்கள் கூறுகின்றன.
அதன் அடிப்படையில் பெருமாள் கோயிலுக்கு நிலம் தானமாக கொடுத்ததற்காக எல்லைகளில் வாமன உருவம் செதுக்கப்பட்ட கற்களை நட்டு வைத்துள்ளனர். நிலத்தை அபகரிப்பவர்கள் வாமனனால் தண்டிக்கப்படுவர் என்பதைக் குறிக்கவும் இவ்வாறு வாமனக்கல் நடப்பட்டுள்ளது. இவ்வாறு சேலம் வரலாற்று ஆய்வுமையத் தலைவர் ஆறகழூர் வெங்கடேசன் கூறினார். வரலாற்று ஆர்வலர்கள் ஆத்தூர் செந்தில்குமார், சேலம் ராமச்சந்திரன் ஆகியோர்தான் சதிகல் மற்றும் வாமனக்கல் குறித்த தகவல்களை வழங்கினர் என்றும் அவர் கூறினார்.