தமிழகத்தில் இந்துசமய அறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில் வாளாகத்தில் பூ,மாலை உள்ளிட்ட பூஜை பொருள்கள் விற்பனை செய்யலாம் என ஜூன் 7 ல் வெளியிட்ட சுற்றறிக்கையை திரும்ப பெறுகிறோம் என இந்து சமய அறநிலைய ஆட்சி துறை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிப். 2-ம் தேதி மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 19 கடைகள் எரிந்து சாம்பலானது.
இந்த தீ விபத்தை அடுத்து தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவெடுத்து தமிழகத்தில் இந்துசமய அறநிலைய துறைக்கு உட்பட்ட அனைத்து கோயில்களிலும் உள்ள கடைகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தனர்.
இந்துசமய அறநிலைய துறை ஆணையர் அந்தந்த கோவில் அதிகாரிகளுக்கு கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றுமாறு சுற்றறிக்கை அனுப்பினர். சுற்றறிக்கை உத்தரவை எதிர்த்தும், மாற்று இடம் வழங்ககோரியம் கடை உரிமையாளர்கள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். தமிழக கோயில்களின் பழமையை பாதுகாக்கும் வகையில் கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை 2018 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அகற்றுமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், சங்கரன்கோவில் உள்ளிட்ட கோவில்களை சேர்ந்த கடை வியாபாரிகள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதில் உரிய காலஅவகாசம் வழங்காமல் மற்றும் மாற்று இடம் வழங்காமல் கடைகளை காலி செய்யுமாறு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறு மேல்முறையீட்டு மனுக்களில் கூறியிருந்தனர்.
இந்த மனுக்கள் இன்று நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணன்,கிருஷ்ணவள்ளி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது அரசுதரப்பு வழக்கறிஞர் இந்துசமய அறநிலைய துறை முதன்மை செயலர்,ஆணையர் ராமசந்திரன் தரப்பில் வாதாடினர்.
அப்போது தமிழகத்தில் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை காலி செய்யுமாறு கோவில் ஆணையர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை தாக்கல் செய்யபட்டது.அதில் பிப்ரவரி 2 ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தை தொடர்ந்து பிப்ரவரி 12 ஆம் தமிழக முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கபட்ட முடிவின் அடிப்படையில் இந்துசமய அறநிலைய துறைக்கு உட்பட்ட அனைத்து கோவில் வளாககத்தில் உள்ள கடைகளை காலி செய்ய வேண்டும் என உத்தரவு பிறபிக்கபட்டது. அதே நேரத்தில் பக்தர்களின் நலன் கருதி பூ,மாலை உள்ளிட்ட பூஜை பொருட்களை மட்டும் கோவில் வளாகத்தில் விற்பனை செய்ய அனுமதி வழங்கி ஜூன் 7 ல் சுற்றறிக்கை அனுப்பபட்டது.
இதன் அடிப்படையில் பல கோவில்களில் பூஜை பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கபட்டு வருகிறது.
தமிழக முதல்வர் தலைமையில் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்ற எடுக்கபட்ட முடிவிற்கு எதிராக பூஜை பொருள்கள் விற்பனை செய்யலாம் என ஜூன் 7 ல் வெளியிட்ட சுற்றறிக்கை எதிராக உள்ளது. எனவே கோவில் வாளாகத்தில் பூஜை பொருள்கள் விற்பனை செய்யலாம் என ஜூன் 7 ல் வெளியிட்ட சுற்றறிக்கையை திரும்ப பெறுகிறோம் என கூறப்பட்டது. இதனையடுத்து வழக்கினை அக்டோபர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.