தர்மபுரி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை திடீர் சோதனையில் ஈடுப்பட்டதும் பணிபுரியும் ஊழியர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி எஸ்பி அலுவலகத்திற்கு முன்பு அமைந்துள்ளது தர்மபுரி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மற்றும் தரக்கட்டுப்பாடு அலுவலகம். இந்த அலுவலகத்தில் நேற்று மதியம் சுமார் 2 மணியிலிருந்து டிஎஸ்பி கிருஷ்ணராஜன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் ஈடுபட்டார்.
அங்கு பணிபுரியும் ஒவ்வொரு பணியாளர்களிடமும் தனித்தனியாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் வராத பணம் ஏதாவது இருக்கின்றதா, என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றது.
இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனை மற்றும் விசாரணையில் கணக்கில் வாராத 7 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பொறியாளர் தனசேகரன் என்பவரிடம் பிடிபட்டது. இதில் மேலும் 5 உதவி பொறியாளர்களுக்கும் தொடர்புள்ளதாகவும், அவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை மேலும் விசாரணையை தொடங்கியுள்ளது.
தற்போது சேலம் டூ வாணியம்பாடி வரையாலான சாலை விரிவுப்பணி நடைபெற்று வரும் சூழலில் 100 வருடங்களுக்கு பழைமையான புளியமரங்களை வெட்டியதில் சாலை டெண்டர் பணத்தை விட, சேலத்தில் இருந்து தர்மபுரி வரையிலான மரத்தின் மதிப்பே அதிகமாக இருந்துள்ளதாம். இவை அனைத்தும் அரசு கணக்கில் காட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் விசாரணை தொடர்ந்தால் பல உண்மைகள் வெளியில் வந்துவிடுமோ என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.