/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1485.jpg)
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் அளிக்கப்பட்டன. இப்புகார்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதில் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை நகல் பெறுவதற்காக நேரில் ஆஜராகும்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு சென்னை எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில் அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சண்முகம் என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, காணொளி காட்சி மூலம் ஆஜராகியிருந்த புகார்தாரர்கள், பணத்தை திருப்பி பெற்றுக் கொண்டதாக தெரிவித்தனர். இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ள விவரத்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின் நகலை சமர்ப்பிக்க உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 19ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)