Skip to main content

பப்ஜி மதனின் ஜாமீன் மனு மீது காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Published on 01/07/2021 | Edited on 01/07/2021

 

High Court orders police to respond to pubg Madan's bail plea

 

ஆபாசமாகப் பேசி யூடியூப்பில் விடியோ வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ‘பப்ஜி’ மதனின் ஜாமீன் மனு மீது, பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பப்ஜி விளையாட்டு மூலம் பிரபலமானவர் யூடியூப் மதன் என்ற மதன்குமார். இவர் மீது சென்னை சைபர் க்ரைம் காவல்துறையில் பலர் புகார் அளித்துள்ளனர். அதில், பப்ஜி விளையாட்டு மூலம் சிறுவர், சிறுமிகளுடன் ஆபாசமாகப் பேசி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மதன் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 294 (பி), 509, தகவல் தொழில்நுட்பச் சட்டம் 67, 67ஏ ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்த சைபர் க்ரைம் பிரிவு, போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.

 

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த பப்ஜி மதனை தருமபுரியில் காவல்துறையினர் ஜூன் 18ஆம் தேதி கைது செய்தனர். இதனையடுத்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜூன் 19 அன்று ஆஜரார்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி மதன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து ஜாமீன் கோரி மதன் என்ற மதன்குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மையில்லை எனவும், பெண்களுக்கு எதிரான கொடுமை உள்ளிட்ட எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை என்றும், புகார் அளித்தவர்களை ஏமாற்றவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். எந்த வகையிலும் சட்டத்தை மீறவில்லை என்றும், தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை எனவும், ஏற்கனவே தனக்கு எதிரான வழக்கில் காவல்துறை காவலில் எடுத்து விசாரித்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். 

 

High Court orders police to respond to pubg Madan's bail plea

 

எந்த குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை, எனவே இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் முன் இன்று (01.07.2021) விசாரணைக்கு வந்தது. அப்போது மதன் தரப்பில் கடந்த 13 நாட்களாக சிறையில் இருந்துவருவதாகவும், குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரம் இல்லை எனவும், அதனால் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜாமீன் மனு மீது காவல்துறையின் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக கூறினார். இதனையடுத்து மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை வரும் திங்கள்கிழமைக்கு (ஜூலை 5) நீதிபதி தள்ளிவைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்