டாஸ்மாக் மதுக்கடைகளில் காலிப்பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை சோதனை அடிப்படையில் கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் வரும் நவம்பர் 15- ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மலை வாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுப்பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்றுவிட்டு, பின்னர் காலிப்பாட்டில்களைத் திரும்ப ஒப்படைக்கும் போது, அத்தொகையைத் திரும்ப வழங்கலாம் என் யோசனை தெரிவித்தது.
இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும், அமல்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்க அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அவ்வாறு அமல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில், ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், முதலில் ஒரு மாவட்டத்தில் இந்த திட்டத்தைச் சோதனை முறையில் அமல்படுத்தி, அதன் முடிவுகளை பார்த்து பிற மாவட்டங்களில் அமல்படுத்துவதாக தெரிவித்தார்.
இதையடுத்து, கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் காலிப்பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை வரும் நவம்பர் 15- ஆம் தேதி முதல் இரண்டு மாதங்களுக்கு அமல்படுத்தி, அது குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்தாண்டு ஜனவரி 24- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.