Skip to main content

ஓய்வூதியம் கோரும் சுகந்திர போராட்ட வீரர் ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

Published on 13/02/2018 | Edited on 14/02/2018
court

கொடைக்கானல் பண்ணைக்காடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜுலு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் ," நான் சுதந்திர போராட்ட தியாகி. 15 வயதில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றேன். இதனால் ஆங்கிலேயே அரசால் கைது செய்யப்பட்டு 3.11.1942 முதல் 5.9.1943 வரை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டேன்.

 

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மாநில அரசு வழங்கும் ஓய்வூதியம் கேட்டு 2013-ல் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுத்துறை இணை செயலரிடம் மனு அளித்தேன்.

 

நான் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று சிறைக்கு சென்றதற்கு தியாகிகள் மாயாண்டிபாரதி, பெரியசாமி ஆகியோர் சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த சான்றிதழையும் ஓய்வூதிய விண்ணப்பத்துடன் அனுப்பியிருந்தேன். 

 

ஆனால் எனது விண்ணப்பத்தை அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை. ஓய்வூதியத்துக்காக தொடர்ந்து மனு அளித்தும் பலனில்லை. எனவே ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுவில்  கூறியிருந்தார். 

 

இந்த மனு முன்னர் நீதிபதி மகாதேவன்  முன்பு விசாரணைக்கு வந்தது. கடந்த நவம்பர் 21ல்  மனுதாரருக்கு 2 வாரத்தில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். 

 

இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பொதுத்துறையின் இணைச்செயலர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்துள்ளார். 

 

அந்த மேல்முறையீடில் ," தியாகிகள் ஓய்வூதியம் பெறுவதற்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. மனுதாரர் இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யவில்லை. பிறந்த தேதி தொடர்பாக அளித்த சான்றிதழ் ஏற்கும்படி இல்லை. உள்ளூர் மருத்துவரிடம் சான்று பெற்றுள்ளார். இது செல்லத்தக்கது அல்ல. அதன்படி பிறந்த தேதியை உறுதி படுத்த வேண்டுமென்ற நிபந்தனையையும் பூர்த்தி செய்ய மனுதாரர் தவறிவிட்டார்.  இந்த குறைபாடுகளை தனிநீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை. 20 ஆண்டுகள் தாமதத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தனிநீதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். இது ஏற்கத்தக்கதல்ல. தியாகிகள் பென்சனை பெறுவதற்கான முக்கிய   நிபந்தனைகளை இவர் பூர்த்தி செய்யாத காரணத்தால், தியாகிகள் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்ட தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என கூறியிருந்தார். 

 

இந்த வழக்கு இன்று நீதிபதி சத்தியநாராயணன், நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அனைத்து ஆவணங்களுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முன்பாக பிப்ரவரி22ல் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்.

 

அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை மார்ச் 21ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

- சி.ஜீவா பாரதி

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஷேக் ஷாஜகானை கட்டாயம் கைது செய்ய வேண்டும்’ - மேற்கு வங்க அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
- Court orders West Bengal government to Sheikh Shahjahan must be arrested

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி கிராமத்தில் பட்டியலின பெண்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான ஷாஜகான் ஷேக் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களின் நிலத்தை அபகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த சம்பவங்களை எல்லாம் வெளியே கூறினால் கடுமையான பின் விளைவுகளை சந்திப்பீர்கள் என்று மிரட்டல் விடுத்துள்ளார் ஷாஜகான் ஷேக்.

இந்த நிலையில் தான் கடந்த ஜனவரி மாதம் ரேஷன் பொருட்கள் ஊழல் தொடர்பாக ஷாஜகான் ஷேக் வீட்டில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். அதிகாரிகளை ஷாஜகான் ஷேக் ஆதரவாளர்கள் கடுமையாகத் தாக்கினர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் தப்பிய ஷாஜகான் ஷேக் தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சந்தேஷ்காலி கிராமத்து பெண்கள், ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது போலீசில் புகார் அளித்துள்ள நிலையில், அதனை போலீசார் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஷாஜகான் ஷேக்கின் கூட்டாளிக்குச் சொந்தமான கோழிப் பண்ணைகளைப் போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருவதால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனையடுத்து, மேற்கு வங்க பா.ஜ.க மாநிலத் தலைவர் சுகந்த மஜும்தார் உட்பட பா.ஜ.க.வினர், ஷாஜகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர். பெண்களின் இந்த போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையக் குழு சந்தேஷ்காலி கிராமத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், சந்தேஷ்காலியில் உள்ள பெண்கள், உடல்ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது என்று கூறப்பட்டது. 

இதற்கிடையே, சந்தேஷ்காலி விவகாரத்தை கொல்கத்தா உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (26-02-24) நடந்தது. அப்போது, ‘சந்தேஷ்காலி பகுதியில் நடந்த சம்பவங்கள் குறித்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பே காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த நான்கு ஆண்டுகளில் 42 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டும், ஷேக் ஷாஜகான் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

நான்கு ஆண்டுகளாகக் கைது செய்யப்படாதது ஆச்சரியமாக உள்ளது. கைதுக்கு இடைக்காலத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை. எனவே, ஷேக் ஷாஜகான் கட்டாயம் கைது செய்யப்பட வேண்டும். அவருக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செய்தித்தாள்களில் தகவல் வெளியிட வேண்டும்’ என்று கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணையை மார்ச் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. 

Next Story

‘சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்க’ - உயர்நீதிமன்றம் உத்தரவு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Nataraja Temple administration to submit income and expenditure account  orders High Court

சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் சிதம்பரம் நடராஜர் கோவிலின் நான்கு கோபுரங்கள் அமைந்துள்ள பகுதியிலும், கோவிலின் முதல் மற்றும் இரண்டாவது பிரகாரங்களிலும் எந்த அனுமதியுமின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதற்குத் தடை விதிக்கக் கோரியும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அறநிலையத்துறையின் மனுவில், பழமையான கோவில்களில் எந்த அனுமதியும் பெறாமல் கட்டுமானங்களை மேற்கொள்ளக்கூடாது என உயர்நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளபோதும், அதை மீறி ஆறு அடிக்கு மேல் தோண்டப்பட்டுள்ளதாகவும், எந்த மாதிரியான பணிகள் நடக்கின்றன என்பதே தெரியவில்லை எனவும், கோவிலுக்குள் இருந்த நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர். மகாதேவன், பி.டி. ஆதிகேசவலு அமர்வின் முன்பாக நடைபெற்று வந்தது. பொது தீட்சிதர்கள் குழு தரப்பில் கடைகளோ அன்னதான கூடமோ கட்டவில்லை என்றும், தற்காலிக அமைப்பில் அலுவலகம் தான் செயல்படுகிறது என விளக்கம் அளித்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, புராதனமிக்க எந்த கோவிலிலும் அனுமதியின்றி எவரும் கை வைக்க நீதிமன்றம் அனுமதிக்காது என்றும், கோவில்கள் பக்தர்களுக்கானது மட்டுமே என்றும், வேறு நோக்கத்தில் யாரும் கை வைத்தால் அவர்களை இந்த நீதிமன்றம் தடுக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்தது உயர்நீதிமன்றம்.

இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம், ஆருத்ரா தரிசன அறக்கட்டளை ஆகியவற்றின் கடந்த 3 ஆண்டு வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தீட்சிதர்கள் சபைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.