அமைச்சர் கடம்பூர் ராஜு முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மற்றொருபுறம் தேர்தலைச் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துவருகிறது. பணப்பட்டுவாடாவை தடுக்க அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் அவ்வப்போது வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி விலக்கு அருகே அமைச்சரும், அ.தி.மு.க. வேட்பாளருமான கடம்பூர் ராஜு மற்றும் அவரது ஆதரவாளர்களின் வாகனங்களைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மாரிமுத்து மற்றும் இதர அலுவலர்கள் சோதனை செய்ய முயன்ற போது, அவர்களை பணிசெய்ய விடாமல் அமைச்சர் தடுத்ததாகத் தேர்தல் பறக்கும் படை அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் கடம்பூர் ராஜு மீது நாலாட்டின்புதூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், தன் மீது அவதூறு பரப்பும் நோக்கிலும், அரசியல் உள்நோக்கத்துடனும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன் ஜாமீன் வழங்கும் பட்சத்தில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு உயர்நீதிமன்றக் கிளையில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.