சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விற்பனை செய்ய இடம் ஒதுக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது.
இன்றுமுதல் (30.11.2021) நான்கு வாரத்திற்குத் தக்காளி லாரிகள் நிறுத்த, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கும்படி, கோயம்பேடு மார்க்கெட் கமிட்டிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் கோயம்பேட்டில் தக்காளி விற்பனை செய்ய இடம் ஒதுக்கவில்லை என தக்காளி வியாபாரிகள் நீதிபதி முன்பு இன்று முறையீடு செய்திருந்தனர்.
தக்காளி விற்பனை செய்ய இடம் ஒதுக்கப்படாததால், அதிருப்தி தெரிவித்துள்ள நீதிபதி, பொதுமக்களின் நலன் கருதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ஏன் இதுவரை நிறைவேற்றவில்லை என்று கேள்வியெழுப்பி, கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும வழக்கறிஞர்கள் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.