கடந்த 2015ஆம் ஆண்டு, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு நுழைவு வரி ரூபாய் 60.66 லட்சம் செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்தும், விலக்கு கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 50% வரி செலுத்தினால் காரைப் பதிவுசெய்ய ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ரூபாய் 30.33 லட்சம் வரி செலுத்தியதாக தனுஷ் கூறியதால், விதிகளைப் பின்பற்றிப் பதிவுசெய்ய கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரலில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று (05/08/2021) உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "கார் வாங்கும் மனுவில் என்ன பணியில் இருக்கிறீர்கள் என குறிப்பிடவில்லையே? பணியை அல்லது தொழிலைக் குறிப்பிட வேண்டியது அவசியமில்லையா? மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையைப் பயன்படுத்தும்போது வரியை செலுத்த வேண்டியதுதானே? நீங்கள் எவ்வளவு கார் வேண்டுமானாலும் வாங்குங்கள், ஆனால் செலுத்தும் தொகையை முழுமையாக செலுத்துங்கள். நுழைவு வரியில் இருந்து விலக்கு கேட்டு வழக்கு தொடர்ந்த பின், தற்போது அதனை வாபஸ் பெற எப்படி அனுமதிக்க முடியும்? பால்காரர் உள்ளிட்ட ஏழைகள் கூட பெட்ரோலுக்கு வரி செலுத்தும்போது அதனை செலுத்த முடியவில்லை என நீதிமன்றத்தை நாடுகிறார்களா?" என சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி, நடிகர் தனுஷுக்கு கண்டனம் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, பணியைக் குறிப்பிடாமல் மறைத்தது ஏன் என்பது குறித்து மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, நடிகர் தனுஷ் செலுத்த வேண்டிய வரி பாக்கி எவ்வளவு என்பது குறித்து இன்று மதியத்திற்குள் நடிகர் தனுஷ் தரப்பிடம் வணிக வரித்துறை ஒப்படைக்க வேண்டும். மேலும், கணக்கீட்டு அதிகாரி இன்று மதியம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இதையடுத்து, வழக்கு மீண்டும் இன்று மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், சொகுசு காருக்கு நடிகர் தனுஷ் செலுத்த வேண்டிய 50% வரிப்பாக்கியான ரூபாய் 30.30 லட்சத்தை 48 மணி நேரத்திற்குள் செலுத்த உத்தரவிட்டார். மேலும், “மனுதாரர்கள் வழக்கு தொடரும்போது மனுவில் குறிப்பிட வேண்டிய தகவல் இல்லையென்றால் அதை ஏற்கக் கூடாது. விதிகளைப் பின்பற்றாத பதிவுத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க தலைமை பதிவாளருக்கு உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்துள்ள நிலையில் இதுபோன்ற தேவையற்ற வழக்குகள் மேலும் சுமைதான்” என கருத்து தெரிவித்த நீதிபதி, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.