தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் நாளை (17.10.2024) அதிகாலை கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சென்னையில் நேற்று பெய்த கனமழை காரணமாக சில பகுதிகளில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. அதே சமயம் சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதனால் சென்னைக்கான ரெட் அலர்ட் திரும்பப் பெறப்படும் எனக் கருதப்பட்டது. இத்தகைய சூழலில் தான் வானிலை ஆய்வு மையம் சார்பில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. அதே சமயம் முன்னதாக சென்னையில் கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவதியடைந்துள்ளனர். அந்த வகையில் சென்னை வியாசர்பாடி முல்லை நகர், செங்குன்றம் சோத்துப்பாக்கம் ரோடு குமரன் நகரில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது.