தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னை அண்ணாநகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், கோடம்பாக்கம், மாம்பலம், ராயப்பேட்டை, சைதாப்பேட்டை, கோயம்பேடு, வடபழனி, எழும்பூர், அசோக் நகர், கிண்டி உள்ளிட்ட இடங்களில் கடந்த 1 மணி நேரமாகக் கனமழை பெய்து வருகிறது.
மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விருதுநகர்,கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (31.10.2024) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தீபாவளி பண்டிகை காரணமாக சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊர் நோக்கி பயணம் செய்து வருகின்றனர். பேருந்தில் செல்ல ஆயத்தமாகும் மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல கோயம்பேட்டை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கனமழையால் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக கோயம்பேடு மார்க்கெட்டில் மழை பெய்தது. இதனால் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ளது. தேங்கிய மழைநீர் காரணமாக பொதுமக்களும் வியாபாரிகளும் அவதி அடைந்துள்ளனர்.