கரோனா வைரஸ் உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் வளர்ந்த நாடுகளே அந்த வைரஸை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் திணறி வருகின்றன. இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே 3 வரை ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்துள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகள் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இருந்தபோதிலும், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று மேலும் 31 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1204 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் 28,709 பேர் உள்ளதாகவும், தமிழகத்தில் குழந்தைகள், சிறுவர்கள் என 33 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் 19,255 பேருக்கு இதுவரை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறிய அவர் தமிழகத்தில் இன்று 23 பேர் உள்பட இதுவரை 81 பேர் குணமடைந்துள்ளனர் என்றார்.