
சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்திற்கு வழங்கப்பட்ட ஜமீனை ரத்து செய்யக்கோரி ஹேம்நாத்தின் நண்பர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இந்நிலையில் ஹேம்நாத்திற்கு வழங்கப்பட்ட ஜமீனை ரத்து செய்யக்கோரி ஹேம்நாத்தின் நண்பர் சையத் ரோஹித் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'தனது நீண்ட கால நண்பரான ஹேம்நாத் மூலம் அவரது மனைவியை எனக்கு நன்றாக தெரியும். ஹேம்நாத் சித்ராவிற்கு கொடுத்த தொல்லைகள் குறித்து ஹேம்நாத்தின் மற்ற நண்பர்கள் சாட்சியம் அளிக்க மறுத்த நிலையில், காவல்துறையில் நான் மட்டும் சாட்சியம் அளித்தேன். இதனால் ஹேம்நாத் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், ஹேம்நாத்தை சுதந்திரமாக வெளியே நடமாட விட்டால் சாட்சிகளைக் கலைப்பார். எனவே அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹேமநாத், சித்ராவின் தந்தை மற்றும் போலீசார் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.