நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனுக்கு ஆதரவாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், '“விஜயபிரபாகரன் நினைத்திருந்தால் தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட்டிருக்கலாம். அவர் இந்த மண்ணின் மைந்தன் என்பதால், நம் சொந்த பந்தங்கள் உள்ள இந்த பூமியில், இங்குள்ள மக்களுக்காக, தன் தந்தையின் கனவைச் சுமந்து கொண்டு விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.படித்தவர், பண்பாளர், இளைஞர், கருணை உள்ளம் கொண்டவர், மக்களுக்காக உழைக்க வேண்டுமென்ற நல்ல சிந்தனையோடு வந்துள்ளார்.
விஜயபிரபாகரன் என் பிள்ளை இல்லை; இனி அவர் உங்கள் பிள்ளை. அனைத்துத் தாய்க்குலத்தின் பிள்ளை. இன்னும் கல்யாணம் கூட ஆகல. உக்களுக்காக உழைக்க வந்திருக்கிறார். உங்கள் தலைமையில் தான் அவரது திருமணத்தை நடத்துவேன். எனது மகன் வெற்றி பெற்றால், தொகுதி முழுவதும் இலவச தையல் பயிற்சி மையம் அமைத்து, பயிற்சி நிறைவு பெற்றபின், அனைவருக்கும் தையல் மிஷின் வழங்குவோம். படிக்காத, படித்த இளைஞர்களுக்கு இலவச கணினி பயிற்சி மையங்கள், தொகுதி முழுவதும் சொந்த செலவில் அமைப்போம். தீப்பெட்டி தொழிற்சாலை, பட்டாசுத் தொழிற்சாலை, ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் தீர்வு காணப்படும். மற்ற வேட்பாளர்களைப் பற்றி நான் பேசமாட்டேன்.
மற்றவர்களைக் குறைசொல்லி அதில் ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் நம் கட்சிக்கு இல்லை. நான் விருதுநகர் மக்களை நம்புகிறேன். நாங்கள் சென்னையில் இருப்பதாக நினைக்க வேண்டாம். இனிமேல் விருதுநகரில் தான் இருப்போம். கேப்டனை நம்பியவர்கள் கைவிடப்பட்டதாக சரித்திரம் இல்லை. குடும்ப பாரம்பரிய சொந்த பந்தம், ரத்த பந்தம் இருக்கிறது விருதுநகர் தொகுதியில், விஜயபிரபாகரன் உண்மையாக உழைத்து, மாநில அளவில் முதன்மைத் தொகுதியாக கொண்டு வருவார். தமிழகம் முழுவதும் அதிமுக - தேமுதிக கூட்டணிக்கு அமோக வரவேற்பு உள்ளது. நான் பிரச்சாரத்துக்குச் செல்லும் இடத்திலெல்லாம், விஜயபிரபாகரனுக்கு பிரச்சாரம் செய்யவில்லையா என்று கேட்பார்கள். அவர் என் பிள்ளை இல்லை. அங்குள்ள லட்சக்கணக்கான தாய்மார்களின் பிள்ளை. அவர்கள் பார்த்து கொள்வார்கள் என்று சொன்னேன். உங்களை நம்பி நானும், கேப்டனும், விஜயபிரபாகரனை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறோம். எல்லாம் மொழியும் அவருக்கு தெரியும். அமைதியாக இருக்கிறார் என்று நினைக்க வேண்டாம், அவர் பயங்கர ‘ஷார்ப்’, அறிவாளி, நிச்சயமாக உங்களுக்காக உழைப்பார்”என்று பேசினார்.