Skip to main content

'நாட்டு மக்களுக்கு துணையாக இருக்கப் போகிறார்'- முதல்வர் மடல்

Published on 29/09/2024 | Edited on 29/09/2024
nn

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலினைத் துணை முதல்வராக்க வேண்டும் என்று திமுகவினரும், தமிழக அமைச்சர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இத்தகைய சூழலில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. இதையடுத்து தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பான கடிதத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததோடு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைத் தமிழக துணை முதல்வராகவும் அங்கீகரித்து ஒப்புதல் அளித்திருந்தார்.

இந்நிலையில் புதிய அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'மிகுந்த நம்பிக்கையோடு வாக்களித்துள்ள மக்களின் நம்பிக்கையை காக்கும் வகையில் திமுகவினர் செயல்பட வேண்டும். பவள விழா கொண்டாடும் திமுக தமிழ்நாட்டை ஆறாவது முறையாக ஆட்சி செய்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தை வழங்கிய போதெல்லாம் தொலைநோக்கு திட்டம் மூலம் நாம் அடைந்த வளர்ச்சிதான் இன்றைய தமிழ்நாடு. இன்றைய தினம் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.

அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளோம். அனைத்து துறை வசதி மூலம் மக்கள் பயனடைந்து வருவதை நேரடியாகப் பார்த்து வருகிறோம். மாநில வளர்ச்சியின் குறியீடாக உள்ள அனைத்திலும் தமிழ்நாடு இன்று சிறந்து விளங்குகிறது. இதை இன்னும் சிறப்பானதாக ஆக்கவே திராவிடம் மாடல் ஆட்சியானது நாள்தோறும் நல்ல பல திட்டங்களைத் தீட்டி வருகிறது. 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற இலக்குடன் திமுக அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வளர்ச்சியை ஜனநாயகப்படுத்தி விளிம்பு நிலை மக்கள் ஏழைகளின் வாழ்க்கையில் ஏற்றத்தை உருவாக்கினோம்.

திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை உணர்வு நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. மூன்றாண்டு கால வளர்ச்சிக்கு தமிழ்நாடு அமைச்சர் பெருமக்கள் அனைவரும் பங்களித்திருக்கிறார்கள். துணை முதலமைச்சர் எனக்கு துணையாக அல்ல; நாட்டு மக்களுக்கு துணையாக இருக்கப் போகிறார். தனக்கு வழங்கப்பட்ட விளையாட்டு துறையின் மூலம் இந்தியாவின் கவனத்தை மட்டுமல்ல உலகின் கவனத்தை ஈர்த்தவர் உதயநிதி. விளையாட்டு துறை மிகக் குறுகிய காலகட்டத்தில் வீறு கொண்டு எழுந்துள்ளது. நாள்தோறும் விளையாட்டு வீரர்கள் பெற்று வரும் பரிசுகள் ஒலிம்பிக்கை நோக்கிய நம் மாநிலத்தின் பயணமாக அமைந்துள்ளது.

தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்களை மிக உன்னிப்பாக கவனித்து ஆய்வு செய்து வருகின்றனர். எந்த விமர்சனத்திற்கு ஆளாகாமல் கவனித்து துறையின் மூலம் மாநிலத்தை வளப்படுத்த வேண்டும். செந்தில் பாலாஜியை வைத்து திமுகவுக்கு எதிரான சதி செயல்களை செய்ய ஒரு கூட்டம் திட்டமிட்டது. செந்தில் பாலாஜியின் தியாகத்தை நான் வாழ்த்தியதை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதற்கு விலையாக 15 மாத சிறையை செந்தில் பாலாஜி ஏற்றது தான் தியாகம். கடந்த கால உழைப்பு, நிகழ்கால திறனை மனதில் வைத்து தான் புதிய அமைச்சர்களுக்கு  பொறுப்பை ஒப்படைத்துள்ளேன். திராவிட மாடல் ஆட்சி நாட்டுக்கே முன்மாதிரி ஆட்சியாக அமைய நாம் உழைப்போம்' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்