Skip to main content

“இத்தத்தண்டி நகைய போட்டுக்கிட்டு திருட வந்தியா...” - திருவிழா கூட்டத்தில் கைவரிசை; ரவுண்டு கட்டிய மக்கள்

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

"Have you come to steal this kind of jewelry?" - The woman who came to steal jewelry in the festival crowd; People built round

 

மதுரை மாவட்டம் மேலூரில் கோவில் திருவிழா கூட்டத்தில் தங்க நகையைப் பறிக்க முயன்ற பெண் ஒருவரை ரவுண்டு கட்டிய பெண்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பியது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சூரக்குண்டு என்ற பகுதியில் இன்று நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அப்பொழுது கூட்டத்தில் புகுந்த பெண் ஒருவர் பெண்களிடம் நகையைத் திருட முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த பெண்கள் அவரை இழுத்து வந்து ஒரு பகுதியில் அமரவைத்து சுற்றி நின்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். ''கழுத்துல 10 பவுனுக்கு இவ்ளோ பெரிய செயின் போட்டு இருக்கியே. இத்தத்தண்டி நகைய போட்டுகிட்டு திருட வந்திருக்கியே' எனத் திட்டியுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில்  வைரலாகி வருகிறது. நகையை வெட்டுவதற்கு அந்த பெண் எடுத்து வந்த கருவியை அவரது கையிலே கொடுத்து புகைப்படம் எடுத்த அப்பகுதி மக்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வைகை அணையில் நீர் திறப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Water opening in vagai Dam; Flood warning for coastal residents

 

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பொழிந்து வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

அறிவிப்பின்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. பாசனத்திற்காக முதற்கட்டமாக 1500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி மற்றும் மதுரை ஆகிய இரண்டு மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள பூர்வீக பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வைகை அணையின் பிரதான ஏழு மதகுகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

அங்கித் திவாரி கைது! - தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சொல்வது என்ன? 

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Ankit Tiwari arrested! What does the Tamil Nadu Anti-Corruption Department say?

 

திண்டுக்கல்லில் தமிழ்நாடு ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறையால் ரூ. 20 இலட்சம் பெற்ற அமலாக்கத்துறை அலுவலர் அங்கித் திவாரி கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. 

 

அதில், ஒன்றிய அரசின் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அலுவலராகப் பணிபுரிந்து வரும் அங்கித் திவாரி என்பவர் கடந்த 29.10.2023 அன்று திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரைத் தொடர்பு கொண்டு அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் பதிவு செய்யப்பட்டு முடிந்து போன வழக்கை சுட்டிக்காட்டி, அவ்வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டுமென பிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாகவும், 30.10.2023 அன்று மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரவேண்டும் என்றும் கூறியுள்ளார். 

 

அதன்படி, அந்த அரசு ஊழியர் மதுரைக்குச் சென்றபோது அங்கித் திவாரி அரசு ஊழியரின் காரிலேயே ஏறிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.3 கோடி தரவேண்டும் என்றும் பின்னர் தனது உயரதிகாரிகளோடு பேசுவதாகத் தெரிவித்துவிட்டு இறுதியாக ரூ.51 லட்சம் தரவேண்டும் என்றும் பேரம் பேசி உள்ளார். கடந்த 01.11.2023 அன்று அரசு ஊழியர் முதல் தவணையாக ரூ.20 லட்சம் பணத்தை அவரிடம் வழங்கி உள்ளார். பின்னர், மேல் அதிகாரிகளுக்கும் பங்குதர வேண்டி உள்ளதால் பேசியபடி முழுத்தொகையான ரூ. 51 லட்சத்தையும் தரவேண்டும் என்றும். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தொடர்ந்து வாட்ஸ்அப் மூலமும், குறுஞ்செய்திகள் மூலமும் மிரட்டியுள்ளார். இவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அந்த அரசு ஊழியர், 30.11.2023 அன்று திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையில் அங்கித் திவாரி அமலாக்கத்துறை அதிகாரி என்றும், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அரசு ஊழியரை மிரட்டி பணம் வசூலித்துள்ளார் என்றும் தெரிய வந்ததால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இரண்டாவது தவணையாக 01.12.2023 காலை 10.30 மணியளவில் ரூ. 20 லட்சத்தைப் பெற்றுக்கொண்டபோது அவர் கையும், களவுமாக பிடிபட்டார். அதனைத் தொடர்ந்து அங்கித் திவாரியின் வீடு மற்றும் மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் ஆகியவற்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

 

இச்சோதனையின்போது இவருக்குத் தொடர்புடைய பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் இவர் அமலாக்கத்துறையின் பெயரில் எவரேனும் மிரட்டியோ அல்லது அச்சுறுத்தியோ இதேபோன்ற யுக்தியை பயன்படுத்தி கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த குற்ற நிகழ்வில் பிற அமலாக்கத்துறை அலுவலர்களுக்குத் தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் தொடர்ச்சியாக அங்கித் திவாரிக்கு தொடர்புடைய இதர இடங்களிலும் சோதனைகள் மேற்கொள்ள தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.