வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒன்றிய அரசுடன் நடத்திய நான்கு கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. விவசாயிகள் நேற்று பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி சென்ற போது, எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறைக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மீது காவல்துறை தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீசினர். குறிப்பாக பஞ்சாப் ஹரியானா எல்லைப் பகுதியான கனாரியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 21 வயதான விவசாயி உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் நேற்றைய தினம் விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த சேனாபதி கிராமத்தில் உள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட, அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் மற்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகி வேலுமணி ஆகிய இருவரும், விவசாயி கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருமானூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கோசலராமன், அரியலூர் தாசில்தார் ஆனந்தவேல் ஆகியோர், இரு விவசாயிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக தரும்படி தெரிவித்தனர். அதன்பிறகு ஒரு வழியாக மூன்று மணி நேரம் போராடிய விவசாயிகளை தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கீழே இறக்கினர்.
அதன்பிறகு விவசாயிகள், டெல்லியில் போராடி துப்பாக்கிச்சூட்டில் பலியான விவசாயிக்கு ஒரு கோடி இழப்பீடு தர வேண்டும். துப்பாக்கிச் சூட்டினை நிறுத்த வேண்டும். கண்ணீர் புகை குண்டு வீசுவதனை உடனடியாக நிறுத்த வேண்டும். துப்பாக்கிச்சூடு நடத்திட உத்தரவிட்ட காவல்துறை அதிகாரிகளை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டி அளித்தபடி குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும். அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயம் பொய்த்து போனதால் விவசாயிகளின் பிள்ளைகளின் கல்விக் கடன்களை ரத்து செய்ய வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும். அறவழியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்தை தீவிரவாதிகளின் போராட்டத்தைப் போன்று கொச்சைப்படுத்துதலை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர்.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார், மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பதாக கூறினர். பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு முதலுதவி செய்து, பழச்சாறு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டனர். இந்த மொத்த நிகழ்வும் முடியும் வரை அரியலூர் தாசில்தார் உடனிருந்தார். இரு விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியதால் அந்த இடத்தில் சிறிது நேரம் பதட்டமான சூழல் நிலவியது.