உலக உணவு தினத்தை முன்னிட்டு உணவு பிரியர்களுக்காக திண்டுக்கல்லில் பிரபல முஜிப் பிரியாணி கடை மூலமாக பழைய நாணயத்திற்கு பிரியாணி வழங்கப்பட்டது.
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டு அருகே உள்ள பிரபல முஜிப் பிரியாணி கடை உரிமையாளர்களான முஜிப்ரகுமான் அவருடைய தம்பி பிலால் ஆகியோர் உலக உணவு தினத்தை முன்னிட்டு உணவு பிரியர்களுக்காக பிரியாணி கொடுக்க முடிவு செய்தனர். அதை இலவசமாக கொடுத்தால் நன்றாக இருக்காது என்பதற்காக பழைய நாணயங்களை பாதுகாத்து வைத்திருப்பவர்களை கௌரவப்படுத்தும் வகையில் பழைய நாணயத்துக்கு பிரியாணி கொடுக்க முடிவு செய்தார்.
அதன்படி பழைய 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி உலக உணவு தினத்தை முன்னிட்டு கொடுக்கப்படும் என்று வாட்ஸ் அப், பேஸ்புக் வாயிலாக தெரிவித்து இருந்தார். அதை தொடர்ந்துதான் உணவு பிரியர்களும் உலக உணவு தினமான இன்று அதிகாலை எட்டு மணிக்கெல்லாம் முஜிப் பிரியாணி கடைக்கு முன் நீண்ட வரிசையில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நின்றனர். பின் உணவு பிரியர்களிடம் ஐந்து காசு வாங்கிக்கொண்டு அரை பிளேட் சிக்கன் பிரியாணியை கொடுத்து திண்டுக்கல் கூடைப் பந்தாட்ட தலைவர் யூசுப் அன்சாரி தொடங்கி வைத்தார்.
அதை தொடர்ந்து பெரியவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என 500 பேருக்கு மேல் ஐந்து பைசாவை கொடுத்து அரை பிளேட் சிக்கன் பிரியாணியை வாங்கி சென்றனர். ஆனால் இந்த விஷயம் காட்டுத் தீ போல் பரவியதால் மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஐந்து பைசா நாணயத்துடன் கடைக்கு படையெடுத்து வந்தவர்களுக்கும் பிரியாணி வழங்கினார்கள். ஏற்கனவே இதேபோல் கடந்த ஆண்டும் உலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணியை வழங்கினார்கள். அதோடு ஐந்து திருக்குறளை தவறில்லாமல் படித்த மாணவ மாணவிகளுக்கும் அரை பிளேட் பிரியாணியை வழங்கி ஊக்கப்படுத்தினார்கள். அதோடு இந்த கரோனா காலத்திலும் தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு கடந்த ஐந்து மாதங்களாகவே தொடர்ந்து உணவு வழங்கியும் வருகிறார்கள்” என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.