பெரம்பலூர் மாவட்டம் ஈச்சங்காடு காட்டு கொட்டாய் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவரது வீட்டின் மேற்கூரையில் போடப்பட்டிருந்த சிமெண்ட் சீட்டை துளைத்துக் கொண்டு துப்பாக்கி குண்டு வீட்டுக்குள் (புல்லட்) வந்து விழுந்துள்ளது. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் நாராயணசாமி, சுப்பிரமணியன் புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின்பேரில் பாடாலூர் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சுப்பிரமணியன் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியதோடு அவரது வீட்டு கூரையை துளைத்து கொண்டு வந்த புல்லட்டை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டார்.
இந்த நிலையில் நேற்று சுப்பிரமணியன் குடும்பத்தினர் வீட்டை பெருக்கி சுத்தம் செய்துகொண்டிருந்தபோது இரண்டு மாதத்திற்கு முன்பு இதேபோன்று ஹாஸ்பெட்டாஸ் ஷீட் சுத்தம் செய்த போது மற்றொரு சிறிய ரக துப்பாக்கி குண்டு கிடந்துள்ளது. அந்தக் குண்டு துளைத்த மேற்கூரையும் சுப்பிரமணியம் குடும்பத்தினர் காண்பித்துள்ளனர். இதையடுத்து திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை பயிற்சி போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது இந்த புல்லட் சுப்பிரமணியன் வீட்டு கூரையை துளைத்துக் கொண்டு வந்து விழுந்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது. பாடாலூர் போலீஸ் பகுதிக்கு உட்பட்ட நாரணமங்கலம் கிராமத்தின் அருகில் உள்ளது பச்சைமலை.
இந்த மலை அடிவாரத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி சூடும் தளம் உள்ளது. இங்கு கடந்த 21ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை ( ஆர்பிஎப்) போலீசார் பயிற்சி மேற்கொண்டு இருந்தனர். அவர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டபோது யாரோ ஒருவரின் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு மலையின் பின்புறம் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள ஈச்சங்காடு காட்டுக்கொட்டாய் கிராமத்தில் வசித்த சுப்பிரமணியன் வீட்டு கூரையை துளைத்துக் கொண்டு விழுந்துள்ளது என போலீசாரால் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து திருச்சி தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன், சுப்பிரமணியன் வீட்டிற்கு வந்து அந்த புல்லட்டை பார்வையிட்டு அது என்ன ரகம் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார்.