தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க வரும் 9-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி செல்கிறார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் 22ஆம் தேதி பொது மக்கள் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற போது போலீசார் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களை துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுவரை தூத்துக்குடி செல்லாதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. சம்பவம் நடந்து முடிந்து இரண்டு நாட்கள் கழித்து நிதானமாக செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், துப்பாக்கிச்சூட்டை நானும் உங்களைப் போல் தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்துக்கொண்டேன் என சர்வ சாதரணமாக கூறினார். மேலும் அவர், தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் தான் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்று தனக்கு அந்த 144 பொருந்தாது என்பதைக்கூட தெரியாமல் வெள்ளந்தியாக கூறினார். இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தூத்துக்குடியில் ஒரு வாரம் 144 தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மே 27-ஆம் தேதி அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. பின்னர் மே 28-ஆம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். ஆனால் முதல்வர் சம்பவ இடத்துக்கு செல்லாதது விமர்சனத்துக்குள்ளானது.
இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிடப்பட்டது. இதனையடுத்து 22 ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. ஆலையில் வாயிலில் அதற்கான ஆணையும் ஒட்டப்பட்டது.
இந்நிலையில் நாளை மறுதினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி செல்கிறார். அங்கு துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.