Skip to main content

'இனி குண்டாஸ் தான்' - சென்னை காவல்துறை அதிரடி அறிவிப்பு

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

n

 

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், சென்னையில் கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம், போலி மதுபானம், கஞ்சா மற்றும் மெத்தனால் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கீழ்கண்ட செல்போன் எண்களை தொடர்பு கொண்டும், வாட்ஸாப் மூலமாகவும், குறுஞ்செய்தி வாயிலாகவும் தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

இது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை பெருநகரில் ஆங்காங்கே போலீசார் சார்பாக பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் கொடுக்கும் பொதுமக்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். இது போன்ற குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு வடக்கு மண்டலம் (பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு காவல் மாவட்டங்கள்) - 8072864204, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மேற்கு மண்டலம் (அண்ணா நகர், கொளத்தூர், கோயம்பேடு காவல் மாவட்டங்கள்) - 9042380581, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தெற்கு மண்டலம் (அடையார், புனித தோமையார் மலை, தி.நகர் காவல் மாவட்டங்கள்) - 9042475097, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கிழக்கு மண்டலம் (திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர் காவல் மாவட்டங்கள்) - 6382318480.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு; விஜயகாந்த் பங்கேற்பு!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Notification of DMDk Working Committee General Assembly Meeting Vijayakanth participation

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில் நுரையீரல் பாதிப்புக்காக கடந்த மாதம் 18 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே விஜயகாந்த் பூரண குணமடைய தொண்டர்கள், ரசிகர்கள் எனப் பலரும் பிரார்த்தனை செய்தனர். இதனையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார் என மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியாகி இருந்தது.

இந்நிலையில், தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 14 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 14 ஆம் தேதி (14.12.2023) வியாழக்கிழமை காலை 8.45 மணியளவில், சென்னை, திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. அதில் தேமுதிக நிறுவனத் தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். மேலும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றவுள்ளார்.

இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், தேர்தல் பணி குழு செயலாளர்கள், கழக அணி செயலாளர்கள், கழக அணி துணை செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பேரூராட்சி கழக செயலாளர்கள், மற்றும் புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி, அந்தமான் ஆகிய மாநில கழக செயலாளர்களும் இப்பொதுக்குழு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில் தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

குழந்தையை ஒப்படைப்பதில் அரசு மருத்துவமனை அலட்சியம்; ஊழியர் பணியிடை நீக்கம்

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Negligence of government hospital in handing over baby

வட சென்னை கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் மசூத் - சௌமியா தம்பதியினர். இதில் சௌமிய கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி திடீரென சௌமியாவிற்கு வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் புயலின் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு கன்னிகாபுரம் பகுதியில் மழைநீர் புகுந்துள்ளது. அதனால் சாலையில் தண்ணீர் இருந்ததால் சௌமியாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், வீட்டிலேயே குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்தவுடன் அழவில்லை என்பதால் இறந்துவிட்டதாக அருகிலிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மீன்பாடி வண்டி உதவியுடன் குழந்தை முதலில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சௌமியாவையும், குழந்தையையும் கொண்டு சென்றனர். அங்கு சௌமியாவிற்கு தேவையான அனைத்து சிகிச்சையும் அளித்துள்ளனர். 

பின்னர் இறந்த குழந்தையை தம்பதியிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால் இறந்த குழந்தையை துணியால் சுற்றி கொடுக்காமல், மருத்துவமனை பிணவறை ஊழியர் அட்டைபெட்டியில் வைத்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

அந்த குழந்தையின் உடலை அட்டை பெட்டியில் வைத்து கொடுத்த விவகாரத்தில், அரசு மருத்துவமனையின் பிணவறை உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “பெற்றோர்கள் பிரேத பரிசோதனை செய்யாமல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். பிரேத பரிசோதனை செய்தால் உடல் முழுவதும் வெள்ளை துணிகளை கட்டிக்கொடுப்பது வழக்கம். ஆனால் பெற்றோர்கள் குழந்தையின் உடலை துணிகள் வைத்து சுற்றித்தர வேண்டும் என கேட்டிருந்தால் நாங்கள் சுற்றிக் கொடுத்திருப்போம். அவர்கள் எதையும் கேட்கவில்லை” என்று விளக்கமளித்துள்ளார்.