துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக, இரண்டு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியைக் காட்டி கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டவரை, குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவி வருகிறது. குண்டர்கள், கிரிமினல்கள், அரசியல்வாதிகள் துப்பாக்கி உரிமம் வைத்துள்ளனர். அதுபோல, தமிழகத்தில் பரவி வரும் துப்பாக்கி கலாச்சாரம், நாட்டுக்கும், மாநிலத்துக்கும் நல்லதல்ல என கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பீஹார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், அசாம், சத்தீஸ்கரில் சட்டவிரோதமாக துப்பாக்கிகள் தயாரிக்கப்படுவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான கேள்விகளுக்கு, இரண்டு வாரங்களில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தனர்.