புதுக்கோட்டை மாவட்டம், வேப்பங்குடி ஊராட்சி பொற்பனைக் கோட்டை கிராமத்தில் உள்ள சங்ககால கோட்டையின் உள்பகுதியில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சார்பில் முனைவர் இனியன் இயக்குநராகக் கொண்டு அகழாய்வுப் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த எஞ்சியுள்ள சங்ககால கோட்டை, கோட்டைப் பகுதியில் கிடைத்த பொருட்கள் பற்றியெல்லாம் பல்வேறு ஆய்வாளர்களின் தகவல்களை பற்றி அறிந்திருந்த சிங்கப்பூர் ஐந்தினை மைந்தர்கள் குழு சார்பில் ஏற்கனவே மேலாய்வு செய்த ஆய்வாளர்களுக்கும் தற்போது அகழாய்வு செய்யும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கும் பாராட்டுகளைத் தெரிவித்திருந்த நிலையில், இத்தனை காலமாக சங்ககால கோட்டையை முழுமையாக பாதுகாத்து வந்த வேப்பங்குடி ஊராட்சி மற்றும் பொற்பனைக்கோட்டை கிராம மக்களுக்கும் பாராட்டியதோடு அப்பகுதி இளைஞர்கள் அரசு வேலைக்கு செல்ல உதவியாக அரசு போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான புத்தகங்களைப் பரிசளிக்க முன்வந்தனர்.
அதேபோல போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களை ஊராட்சி நூலகத்தில் வைக்க ஊராட்சிமன்றத் தலைவர் ராஜாங்கம் மற்றும் கிராம இளைஞர்கள் பெற்றுக் கொண்டு நன்றி கூறினார்கள். மேலும் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள போட்டித் தேர்வுக்கான புத்தகங்களைக் காட்சிப் பொருளாக வைத்திருக்காமல் படித்துப் பயனடைவோம் என்றனர் இளைஞர்கள். விரைவில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையத்தையும் ஏற்படுத்துவோம் என்றனர்.