தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் உள்ள மொத்தம் 7 ஆயிரத்து 31 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இந்தத் தேர்வில் கலந்து கொள்ள தமிழக முழுவதும் இருந்து 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 ஆண்கள், 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பெண்கள், 131 திருநங்கைகள் என மொத்தம் 22 லட்சத்தி 2 ஆயிரத்தி 942 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அரசு அறிவித்தபடி நேற்று இதற்கான தேர்வு நடைபெற்றது. விண்ணப்பித்தவர்களில் மூன்று லட்சம் பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. இதில் பல்வேறு மையங்களில் தேர்வாணையம் அறிவித்த நேரத்தைக் கடந்து வந்தவர்களை தேர்வு எழுத அனுமதிக்காததால் ஆங்காங்கே சில இடங்களில் பரபரப்பு ஏற்பட்டது. உதாரணத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகரில் உள்ள கபிலர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அங்கவை சங்கவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் தேர்வு மையம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேர்வாணையம் அறிவித்த நேரத்தை கடந்து சிலர் தேர்வு எழுத வந்தனர். அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதில் ஆத்திரமடைந்த தேர்வு எழுத வந்தவர்கள், திடீரென்று பள்ளியின் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களையும் தேர்வு எழுத அனுமதிக்க கோரி கோஷமிட்டனர். பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இது குறித்த தகவல் அறிந்த திருக்கோவிலூர் காவல் உதவி ஆய்வாளர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச்சென்றனர். விழுப்புரம் நகரில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுத நேரம் கடந்து வந்தவர்களை அனுமதிக்க மறுத்ததால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது.