குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் கோரி, தலைமைச் செயலக பெண் ஊழியர் தாக்கல் செய்த மனுவுக்கு பிப்ரவரி 13-ம் தேதி விளக்கமளிக்க சிபிசிஐடி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ மற்றும் குரூப் 4 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணை நடத்தி, பலரைக் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யக் கூடும் என முன்ஜாமீன் கேட்டு, தலைமைச் செயலகத்தில் நிதித்துறையில் உதவியாளராகப் பணியாற்றி வரும் கவிதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் பள்ளியில் குரூப் 2 ஏ தேர்வு எழுதியதாகவும், தன்னுடன் தேர்வு எழுதிய விக்னேஷ், சுதா மற்றும் சுதா தேவி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளதைப் போல தன்னைக் கைது செய்யக் கூடும் என மனுவில் அச்சம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 23- ம் தேதி, தான் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து மகப்பேறு விடுப்பில் உள்ளதாகவும், அதனால் ஆதாரங்கள் எதையும் கலைக்க வாய்ப்பில்லை என்பதால் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுகுறித்து விளக்கமளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவுக்குப் பதிலளிக்கும்படி, சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 13-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.